பணத்திற்காக வியாபாரி, மனைவியை படுகொலை செய்த 12 வயது சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்
பணத்திற்காக இரும்பு கடை வியாபாரி அவரது மனைவியை 12 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது 60). இவரது மனைவி ஹஸ்ரா. இப்ராகிம் காசியாபாத்தில் இரும்புக்கடை நடத்தி வருகிறார்.
இதனிடையே, கடந்த மாதம் 22-ம் தேதி இப்ராகிம் அவரது மனைவி ஹஸ்ரா கொலை செய்யப்பட்டனர். இப்ராகிம் அவரது வீட்டில் பிணமாகவும், அவரது மனைவி வீட்டிற்கு வெளியே உள்ள கழிவறை அருகே கழுத்தில் துணியால் இறுக்கியும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பணத்திற்காக 12 வயது சிறுவன் கூட்டாளியுடன் சேர்ந்து இப்ராகிம் அவரது மனைவியை கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையான தம்பதிக்கு 12 வயது சிறுவனை முன்கூட்டியே தெரிந்துள்ளது. இரும்பு வியாபாரம் செய்யும் இப்ராகிமிடம் அதிக பணம் இருப்பதை அறிந்துகொண்ட அந்த 12 வயது சிறுவன் மன்ஜேஷ், ஷிவம், சந்தீப் ஆகிய கூட்டாளிகளுடன் இணைந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளான்.
திட்டமிட்டபடி, சிறுவன் தனது கூட்டாளிகளுடன் இப்ராகிமின் வீட்டிற்குள் நுழைந்துள்ளான். அங்கு கொள்ளையடிக்க முற்பட்டபோது இப்ராகிம், அவரது மனைவி தடுத்ததால் இருவரையும் சிறுவன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளான். பின்னர், வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான்.
இது தொடர்பாக 12 வயது சிறுவன், அவனது கூட்டாளிகள் மன்ஜேஷ், ஷிவத்தை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சந்தீப்பை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ. 12 ஆயிரம், ஒரு செல்போன், தங்க செயின் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.