12-வது சட்டசபை தேர்தல் கண்ணோட்டம்எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி

12-வது சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் கூட்டணி ஆட்சி கூட்டணி ஆட்சி நடந்தது,
பெங்களூரு-
கடந்த 1999-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா முதல்-மந்திரி ஆனார். அப்போது காங்கிரஸ் பலமாக இருந்ததால் ஆட்சிக்காலம் முடியும் முன்பே எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சியை கலைத்துவிட்டு பொதுத்தேர்தலை சந்தித்தார். மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துவிடும் என்று அவர் அதீத நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அது பொய்யாகி விட்டது.
இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) ஆகிய எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.
பின்னர் திரைப்பட தயாரிப்பாளராக இருந்த குமாரசாமி திடீரென அரசியலுக்குள் நுழைந்து, தேவேகவுடாவுக்கே தெரியாமல் ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்து, பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார். சினிமா படம்போல் நடந்த இந்த காட்சிகள் அந்த காலக்கட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந்தேதி மற்றும் 26-ந்தேதி என இரு கட்டமாக 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. கடந்த தேர்தலில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், 5 ஆண்டு முழுமையாக ஆட்சி செய்தது. இதற்கு முன்பு முதல்-மந்திரியாக இருந்தவர்கள் யாரும் 5 ஆண்டு கால ஆட்சியை முழுமையாக முடிக்கவில்லை. இந்த பெருமைக்கு சொந்தக்காரராக எஸ்.எம்.கிருஷ்ணா திகழ்கிறார். அதற்கு முன்பு தேவராஜ் அர்ஸ் சுமார் 4 ஆண்டுகள் 10 மாதங்கள் ஆட்சியில் இருந்தார். அதன் பின்னர் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் 224 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இரு அணிகளாக பிளவுபட்ட ஜனதாதளம் (எஸ்) கட்சி 220 இடங்களிலும், ஜனதாதளம்(யு) 26 இடங்களிலும், பா.ஜனதா கட்சி 198 இடங்களிலும், கன்னட சலுவளி வாட்டாள் கட்சி 5 இடங்களிலும், இந்திய குடியரசு கட்சி 3 இடங்களிலும், கன்னட நாடு கட்சி 188 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 5 தொகுதிகளிலும் போட்டியிட்டது. மொத்தம் 32 கட்சிகள் இந்த தேர்தலில் களமிறங்கின. 442 சுயேச்சைகளும் போட்டியிட்டனர். அதாவது 1,614 ஆண் வேட்பாளர்களும், 101 பெண் வேட்பாளர்களும் மல்லுக்கட்டினர்.
மொத்தம் 3 கோடியே 85 லட்சத்து 86 ஆயிரத்து 754 வாக்காளர்கள் (ஆண்கள்- 1,96,02,374 பேர், பெண்கள்- 1,89,84,380 பேர்) ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். இருப்பினும் தபால் ஓட்டுகள் சேர்த்து மொத்தம் 2 கோடியே 51 லட்சத்து 45 ஆயிரத்து 590 ஓட்டுகள் பதிவானது. இது 65.17 சதவீதமாகும். இவற்றில் 16,524 வாக்குகள் செல்லாதவை ஆனது.
இரு கட்டமாக நடந்த வாக்குப்பதிவுக்கு பிறகு, 13-5-2004 அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின. இதில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனது. அதாவது காங்கிரஸ் கட்சி 65 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 58 இடங்களிலும், ஜனதாதளம் (யு) 5 இடங்களிலும், பா.ஜனதா 79 இடங்களிலும், இந்திய குடியரசு கட்சி, கன்னட நாடு கட்சி, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. மேலும் 13 சுயேச்சைகளும் வெற்றிக்கொடி நாட்டினர்.
கர்நாடக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு கட்சி தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக காங்கிரசும், பா.ஜனதாவும் ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றன. இருப்பினும் ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர் தேவேகவுடா காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பியதுடன், ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முன்வைத்தார். அதைதொடர்ந்து காங்கிரஸ்- ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் முதல்-மந்திரியாக தரம்சிங் தேர்வு செய்யப்பட்டார். முதல்-மந்திரி பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு கிடைக்க இருந்ததாகவும், அந்த பதவியில் அக்கட்சி சார்பில் சித்தராமையா அமர வாய்ப்பு அதிகம் இருந்ததாகவும், ஆனால் சித்தராமையாவை முதல்-மந்திரியாக்க விரும்பாத தேவேகவுடா, காங்கிரசுக்கு அப்போது முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுத்ததாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் தரம்சிங் 2004-ம் ஆண்டு மே மாதம் 28-ந்தேதி முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். ஜனதாதளம் (எஸ்) சார்பில் சாமுண்டீசுவரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான சித்தராமையாவுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.
2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்த கூட்டணி ஆட்சி பிரச்சினை இல்லாமல் தொடர்ந்தது. அதன் பின்னர் தேவேகவுடா- அவரது மகன் குமாரசாமி இடையே மன கசப்புகள் நிகழ்ந்தன. இதையடுத்து ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களை தனது கட்டுக்குள் கொண்டு வந்த குமாரசாமி, தரம்சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றார். இதனால் 2006-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தரம்சிங் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.






