12-ம் வகுப்பு ஐ.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் மான்யா குப்தா முதலிடம்


12-ம் வகுப்பு ஐ.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் மான்யா குப்தா முதலிடம்
x

12-ம் வகுப்பு ஐ.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் மான்யா குப்தா என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

கொல்கத்தா,

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் எனப்படும் சி.ஐ.எஸ்.சி.இ. அமைப்பு நடத்திய ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

இதில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள ஹெரிடேஜ் பள்ளியை சேர்ந்த மாணவியான மான்யா குப்தா, 12-ம் வகுப்பு ஐ.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் 99.75 சதவீதம் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, இந்திய அளவில் முதல் இடம் பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எனது நண்பர்களிடம் நீங்கள் எவ்வளவு மதிப்பெண் வாங்கி இருக்கிறீர்கள்? என கேட்டேன்.

ஆனால், அதற்கு அவர்கள், நீ முதல் இடம் பிடித்து இருக்கிறாய் என என்னிடம் கூறினர். அதற்கு முன் வரை அதுபற்றி எதுவும் தெரியாமல் இருந்தேன் என அவர் கூறியுள்ளார்.

2 ஆண்டுகளாக ஊரடங்கில் இருந்த காலத்திலும், தேர்வுக்கு தயாராக தனது பள்ளி எந்தளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நிறைய உதவிகளை செய்தது. தேர்வுக்கு முன்பு முக்கியத்துவம் கொடுத்து படித்தேன். அதனால், தூங்குவதற்கான காலநேரம் கூட ஒதுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். உளவியல் படிக்க விண்ணப்பிக்க இருக்கிறேன் என்று அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் எனப்படும் சி.ஐ.எஸ்.சி.இ. அமைப்பு, கடந்த பிப்ரவரி 27-ந்தேதி முதல் மார்ச் 29-ந்தேதி வரை ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு இறுதி தேர்வை நடத்தியது.

தொடர்ந்து ஐ.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகள் பிப்ரவரி 13-ந்தேதி தொடங்கி மார்ச் 31-ந்தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வுகளில் மொத்தம் 2.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கான முடிவுகளை cisce.org and result.cisce.org என்ற வலைதளத்திற்கு சென்று மாணவ மாணவியர்கள் அறிந்து கொள்ளலாம். இதற்காக அவர்கள் தங்களது ஐ.டி. எண் மற்றும் குறியீட்டு எண்ணை (இன்டெக்ஸ்) கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளி கிழமை வெளியானது. இதில், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஒட்டுமொத்த அளவில் 87.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொது தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

1 More update

Next Story