மும்பை கோர விபத்தில் இசைக்குழுவினர் 13 பேர் பலி


மும்பை கோர விபத்தில் இசைக்குழுவினர் 13 பேர் பலி
x

மும்பை அருகே மலை பள்ளத்தாக்கில் பஸ் உருண்டு விழுந்து இசைக்குழுவினர் 13 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர் காயம் அடைந்தனர்.

மும்பையை சேர்ந்த 'பாஜி பிரபு வாதக்' என்ற பாரம்பரிய இசைக்குழு கலைஞர்கள் புனே மாவட்டம் பிம்பிரி சிஞ்வட் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று இருந்தனர்.

மும்பை திரும்பினர்

நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று அதிகாலை 1 மணியளவில் அவர்கள் தனியார் பஸ்சில் மும்பை நோக்கி புறப்பட்டனர். பஸ்சில் இசைக்குழுவை சேர்ந்த 42 பேர் இருந்தனர். பஸ் அதிகாலை 4.30 மணியளவில் மும்பை - புனே பழைய நெடுஞ்சாலையில் ராய்காட் மாவட்டம் கொப்போலி மலை பகுதியில் வந்து கொண்டு இருந்தது.

அங்குள்ள சிங்ரோபா கோவில் அருகே வந்தபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மலை பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

300 அடி பள்ளம்

சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு நடந்த பயங்கர விபத்தில் பஸ் பல்டி அடித்தபடி சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்தது. பாறைகளில் மோதி உருண்டு விழுந்த பஸ் அடையாளம் தெரியாத அளவுக்கு நொறுங்கியது. பஸ் உருண்டு விழுந்ததில் பலர் தூக்கி வீசப்பட்டு மலைப்பகுதியில் விழுந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து உதவி கேட்டு அபய குரல் எழுப்பினர். பயணிகளின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த வழியாக வந்தவர்கள் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

13 பேர் பலி

தகவல் அறிந்து போலீசார் மீட்பு படையினருடன் விரைந்தனர். அவர்கள் அந்த பகுதியை சோ்ந்த மக்களின் உதவியுடன் கயிறு கட்டி கீழே சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் உடனடியாக தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் சம்பவ இடத்திலும், ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பலனின்றியும் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்கள் ஜூயி (வயது18), யாஷ் சுபாஷ், வீர் கம்லேஷ் (6), வைபவ் சாப்ளே (15), சுவப்னில் (16), சதீஷ் (25), மனிஷ் ரதோட் (25), கிரிதிக் லோகித் (16), ராகுல் கோதன் (17), ஹர்ஷதா (19), அபய் விஜய் (20), சுவன்னில் துமால் (22) என தெரியவந்தது. மற்றொருவர் அடையாளம் காணப்படவில்லை.

29 காயம்

மேலும் காயம் அடைந்த 29 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த வர்கள் மும்பை கோரேகாவ், சயான், மலாடு, மாகிம் மற்றும் பால்கர் மாவட்டம் விரார் பகுதிகளை சேர்ந்தவர்கள் என ராய்காட் போலீஸ் சூப்பிரண்டு சோம்னாத் கார்கே கூறினார்.

விபத்து நடந்த இடம் மும்பையில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது.

முதல்-மந்திரி பார்வையிட்டார்

இந்தநிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து முதல்-மந்திாி ஏக்நாத் ஷிண்டே பன்வெல் விரைந்தார். அவர் பஸ் விபத்தில் சிக்கி பன்வெல் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்து நடந்த பகுதியையும் பார்வையிட்டார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். மும்பை அருகே நடந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story