பீகாரில் அரசு பள்ளியில் 140 மதுபான பெட்டிகள் பதுக்கல்; போலீசார் தீவிர விசாரணை
பீகாரில் அரசு பள்ளியில் 140 மதுபான பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாட்னா,
பீகாரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மகளிருக்கு அளித்த வாக்குறுதியின்படி, கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுபான உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. முதல்-மந்திரி நிதிஷ் குமார் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பீகாரில் வைஷாலி நகரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அறை ஒன்றில் மதுபான பாட்டில்கள் கொண்ட 140 பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த லால்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் பிரஜேஷ் சிங் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த 140 பெட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த அறையை மதுபான விற்பனையாளர்கள்சட்டவிரோத வகையில் பயன்படுத்தி வந்துள்ளனர். அதில், மதுபானங்கள் கொண்ட பெட்டிகளை பதுக்கி வைத்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.