உலக அமைதி பாதுகாப்புக்காக... 15 நாட்கள் இந்திய-ஆஸ்திரேலிய ராணுவம் கூட்டு பயிற்சி


உலக அமைதி பாதுகாப்புக்காக... 15 நாட்கள் இந்திய-ஆஸ்திரேலிய ராணுவம் கூட்டு பயிற்சி
x

ஐ.நா. உத்தரவின் பேரில் உலக நாடுகளின் அமைதி பாதுகாப்பு நோக்கத்திற்காக இந்திய-ஆஸ்திரேலிய ராணுவம் இன்று முதல் 15 நாட்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகிறது.புதுடெல்லி,


உலகளவில் பல்வேறு நாடுகள் போர் சூழலை எதிர்கொண்டுள்ளன. இவற்றில் உக்ரைனின் மீது ரஷியாவின் படையெடுப்பு சமீப நாட்களாக உலக நாடுகளால் வேடிக்கை பார்க்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஒரு தசாப்தத்திற்கும் கூடுதலான நீண்டகால போர்களாக சிரியா, லிபியா உள்நாட்டு போர் காணப்படுகிறது.

அவ்வப்போது கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு குடிமக்கள் மற்றும் வீரர்களை தாக்கும் நிகழ்வுகள் காணப்படுகின்றன. தவிர, பிற நாடுகளை பொருளாதார பலம் கொண்ட நாடுகள் அச்சுறுத்தும் சூழலும் காணப்படுகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக சீனா-தைவான் விவகாரம் பார்க்கப்படுகிறது. தற்காப்புக்காக அணு சக்தியை பெருக்கி கொள்ளும் நோக்கிலும் வடகொரியா போன்ற நாடுகள் செயல்பட்டு அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில், எந்த நாடானாலும் போரை முடிவுக்கு கொண்டு வரும்படியும், அமைதி பேச்சுவார்த்தை வழியே தீர்வு காணும்படியும் ஐ.நா. அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எனினும், உள்நாட்டு போர், மறைமுக போர், நேரடி போர், நீண்டகால போர் என அது நீடித்து கொண்டே இருக்கிறது. இந்த சூழலில், உலக நாடுகளின் அமைதியை பாதுகாக்கும் முயற்சியாக ஐ.நா. உத்தரவின் கீழ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ராணுவம் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட முடிவானது.

இதன்படி, நவம்பர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 11-ந்தேதி வரையிலான 15 நாட்கள் இந்த ராணுவ கூட்டு பயிற்சி மேற்கொள்ளப்படும். இதற்காக ராஜஸ்தானில் இந்திய ராணுவமும், ஆஸ்திரேலிய ராணுவமும் இணைந்து ஆஸ்திராஹிந்த்-2022 என்ற பெயரில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகிறது. இதற்கான தொடக்க விழா இன்று தொடங்கியுள்ளது.

இந்த ராணுவ பயிற்சியில் வீரர்கள் மற்றும் சில வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். அவர்கள் நீண்ட, பெரிய மற்றும் இயந்திர துப்பாக்கி சுடுதல், ஹெலிகாப்டரில் கயிறு வழியே ஏறி, இறங்குதல், தடைகளை கடந்து செல்லுதல் உள்ளிட்ட கடினம் வாய்ந்த பயிற்சி முறைகளை மேற்கொள்கின்றனர்.
Next Story