மராட்டியம்: தானே ஆஸ்பத்திரியில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் பலி - விசாரணைக்கு உத்தரவு
மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜித்தேந்திர அவாத் குற்றம்சாட்டினார். மேலும் ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்தது.
இந்தநிலையில் அந்த ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 18 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களில் சிலர் முதியவர்கள் எனவும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
விசாரணைக்கு உத்தரவு
நோயாளிகள் உயிரிழப்பு குறித்து தானே மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பாங்கர் கூறியதாவது:-
கல்வா ஆஸ்பத்திரியில் உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள். 8 பேர் ஆண்கள். இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே விசாரித்தார். அவர் நோயாளிகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை கமிஷனர் தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார். முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இது சாதாரண விஷயமல்ல. அது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்
கல்வா மாநகராட்சி ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் தமுதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடுமையாக சாடி உள்ளார்.