மிசோரமில் ரெயில்வே பாலம் இடிந்து விழுந்து 18 தொழிலாளர்கள் பலி - விபத்துக்கு காரணம் என்ன?


மிசோரமில் ரெயில்வே பாலம் இடிந்து விழுந்து 18 தொழிலாளர்கள் பலி - விபத்துக்கு காரணம் என்ன?
x

மிசோரமில் கட்டப்பட்டு வந்த ரெயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 18 தொழிலாளர்கள் பலியாகினர். இந்த கோர விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அய்ஸ்வால்,

வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் தேசிய ரெயில்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மிசோரம் மாநிலத்தின் தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள சாய்ராங் பகுதியில் ரெயில்வே பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.

பைராபி மற்றும் சாய்ராங் ரெயில் நிலையங்களுக்கு இடையே குருங் ஆற்றுக்கு நடுவே 104 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டு வந்தது.

ரெயில்வே பாலம் இடிந்தது

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தன. சுமார் 40 தொழிலாளர்கள் பாலம் கட்டும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 10 மணியளவில் ரெயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் ஈடுபாடுகளில் சிக்கினர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அவர்களுடன் இணைந்து உள்ளூர் மக்களும் மீட்பு பணிகளுக்கு உதவினர்.

18 பேர் பரிதாப சாவு

எனினும் இடிபாடுகளில் இருந்து 18 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இடிபாடுகளில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்பதற்கான பணிகளில் மீட்பு குழுக்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து மிசோரம் முதல்-மந்திரி ஜோரம்தங்கா 'எக்ஸ்' (டுவிட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அய்ஸ்வாலுக்கு அருகே உள்ள சாய்ராங் பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலம் இன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த துயரம் குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மீட்பு பணிகளில் பெருமளவில் வந்து உதவிய மக்களுக்கு எனது அன்பினை தெரிவித்து கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

இதனிடையே மிசோரம் ரெயில்வே பாலம் விபத்து குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "மிசோரமில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

ரூ.10 லட்சம் இழப்பீடு

இந்த நிலையில் மிசோரமில் ரெயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

இதனிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மிசோரம் கவர்னர் ஹரி பாபு கம்பம்பட்டி மற்றும் முதல்-மந்திரி ஜோரம்தங்கா ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார்.

இது குறித்து அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "மிசோரமில் நடந்த கோர விபத்தால் வேதனை அடைந்தேன். மிசோரம் கவர்னர் மற்றும் முதல்-மந்திரி ஆகியோரிடம் பேசி அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய என்னுடைய பிரார்த்தனைகள்" என தெரிவித்துள்ளார்.

மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள்

இதற்கிடையில், மிசோரம் ரெயில்வே பாலம் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களில் சிலர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் மீட்பு நடவடிக்கையில் உதவிக்காக மிசோரம் அரசாங்கத்துடன் ஒருங்கிணைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்களுக்கு உரிய இழப்பீடு விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

விபத்துக்கு காரணம் என்ன?

இந்த நிலையில் கட்டுமான பணிகளுக்காக ரெயில்வே பாலம் மீது பொருத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததன் காரணமாகவே பாலம் இடிந்ததாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story