கடந்த ஆண்டில் மட்டும் காஷ்மீரில் 186 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி.
காஷ்மீரில் 56 பாகிஸ்தானியர்கள் உள்பட 186 பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் டி.ஜி.பி. தில்பாக சிங் கூறினார்.
பயங்கரவாத சம்பவங்கள்
காஷ்மீரில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் மூலம் நடைபெறும் தாக்குதல்கள் அவ்வப்போது நாட்டையே உறைய வைத்து விடுகின்றன. இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவமும், போலீசாரும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அவ்வப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். அதேநேரம் பாதுகாப்பு படையினரின் வீர மரணமும் சில நேரங்களில் நிகழ்வதுண்டு.
டி.ஜி.பி. அறிவிப்பு
இந்த நிலையில் கடந்த ஆண்டு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான படையினரின் நடவடிக்கைகள் குறித்து காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. தில்பாக் சிங் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இந்த ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
159 பேர் கைது
காஷ்மீரில் பூஜ்ஜிய பயங்கரவாத நடவடிக்கைகள் என்ற திசையில் போலீசாரும், பிற பாதுகாப்பு நிறுவனங்களும் நடைபோடுகின்றன. குறிவைக்கப்பட்ட கொலைகள், கையெறி குண்டு வீச்சுகள் போன்ற பயங்கரவாத செயல்களுக்காக பாகிஸ்தான் அமைப்புகள் மூலம் உருவாக்கப்பட்ட 4 முதல் 5 வரையிலான எண்ணிக்கை கொண்ட பயங்கரவாதிகள் அடங்கிய 146 பயங்கரவாத தொகுப்புகள் 2022-ல் அழிக்கப்பட்டன.
அந்தவகையில் 2022-ம் ஆண்டில் மட்டும் 186 பயங்கரவாதிகள் காஷ்மீரில் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 56 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் 159 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
100 இளைஞர்கள்
காஷ்மீரில் 2022-ல் சுமார் 100 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர். இது கடந்த பல ஆண்டுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான். 2022-ல் பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டு விட்டனர். காஷ்மீரில் தற்போது செயல்பாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 100-ஐ விட சற்று அதிகமாக இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை இரட்டை இலக்கத்தில் கொண்டுவர பாதுகாப்பு படையினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இவ்வாறு போலீஸ் டி.ஜி.பி. தில்பாக் சிங் கூறினார்.