பெங்களூருவில் 1,907 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை


பெங்களூருவில் 1,907 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
x

பெங்களூருவில் 1,907 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

பெங்களூருவில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

15 ஆயிரம் போலீசார்

பெங்களூருவில் வருகிற 10-ந் தேதி(நாளை) சட்டசபை தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நான், 2 சிறப்பு கமிஷனர்கள், 2 கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், 2 இணை போலீஸ் கமிஷனர்கள், 24 துணை போலீஸ் கமிஷனர்கள், 67 உதவி போலீஸ் கமிஷனர்கள், 248 இன்ஸ்பெக்டர்கள், 881 சப்-இன்ஸ்பெக்டர்கள், 1,020 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 9,971 போலீஸ்காரர்கள், 2,565 ஊர்க்காவல் படையினர், 49 கம்பெனி மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் என ஒட்டு மொத்தமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அமைதியான முறையிலும், எந்த விதமான பாரபட்சமும் இல்லாமலும் வருகிற 10-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 8 மண்டலங்களிலும் 123 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 131 பறக்கும் படை அதிகாரிகள் நகர் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

28 ரவுடிகள் மீது குண்டர் சட்டம்

பெங்களூருவில் 7,483 ரவுடிகள் பிடிக்கப்பட்டு வாக்குப்பதிவின் போது எந்த விதமான அசம்பாவிதங்களில் ஈடுபடக்கூடாது, தேர்தலின் போது அமைதியை கெடுக்கும் விதமாக எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 28 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை நகரில் 460 பகுதிகளில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் ரோந்து சென்று மக்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

இதுவரை 7,761 உரிமத்துடன் கூடிய துப்பாக்கிகள் போலீஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலீசார் அதிரடி சோதனை நடத்தி 4,818 கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.10 கோடி ரொக்கம், 28 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி, ரூ.9 கோடிக்கு பரிசு பொருட்கள், ரூ.29 கோடிக்கு போதைப்பொருட்கள், ரூ.64 கோடிக்கு பல்வேறு வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

1,907 வாக்குச்சாவடிகள் பதற்றமானது

பெங்களூருவில் 7,916 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 1,907 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். பதற்றமான வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதுடன், அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பெங்களூரு நகரில் உள்ள 28 தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து விதமான முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் எந்த பயமும் இன்றி வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story