சிக்கமகளூரு மாவட்டத்தில் 199 வீடுகள் சேதம்; கலெக்டர் ரமேஷ் தகவல்


சிக்கமகளூரு மாவட்டத்தில் 199 வீடுகள் சேதம்; கலெக்டர் ரமேஷ் தகவல்
x

சிக்கமகளூரு மாவட்டத்தில், கனமழைக்கு 199 வீடுகள் சேதமடைந்து உள்ளதாக கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;

கனமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

இதேபோல் சிக்கமகளூரு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.

விளைநிலத்திற்குள் வெள்ளம் புகுந்து பயிர்கள் நாசமாகியுள்ளது. மேலும் மரங்கள் முறிந்து விழுந்தும், வீடுகள் இடிந்தும் விழுந்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலெக்டர் ரமேஷ் ஆய்வு

இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ், அதிகாரிகளுடன் மழை பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன்படி அவர், சிக்கமகளூரு டவுன் சங்கரபுரா பகுதியில் மழைக்கு இடிந்து விழுந்த வீடுகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் அரசு சார்பில் வீடுகளை கட்டி கொடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் உண்டேதாசரஹள்ளி பகுதியில் ஓடும் எகட்டி கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட நபரை மீட்கும் பணிகளை பார்வையிட்டார்.

இதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

199 வீடுகள் சேதம்

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 199 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 33 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளது.

66 வீடுகள் பாதியளவு இடிந்துள்ளது. மற்ற 103 வீடுகள் சிறிய அளவில் சேதமடைந்துள்ளது. கனமழைக்கு 2 பேர் இறந்துள்ளனர். 3 பேர் கால்வாயில் அடித்து செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர்.

அதேபோல் மழைவெள்ளம் புகுந்து 5.80 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 161 கி.மீட்டர் வரையிலான சாலை பழுதடைந்துள்ளது. 42 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையை அரசிடம் சமர்பித்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story