வியாபாரியின் வங்கி கணக்கில் ரூ.2¼ லட்சம் அபேஸ்


வியாபாரியின் வங்கி கணக்கில் ரூ.2¼ லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:46 PM GMT)

சிந்தாமணி அருகே வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2¼ லட்சம் அபேஸ் செய்த மர்மநபரை போலீசாா் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சிக்பள்ளாப்பூர்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா மிஞ்சேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நரேந்திரபாபு. வியாபாரி. கர்நாடக வங்கியில் இவருக்கு சேமிப்பு கணக்கு உள்ளது. அந்த வங்கி கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்துள்ளார். இந்தநிலையில் திடீரென்று வங்கி கணக்கு முடங்கியது.

இதனால் நரேந்திரபாபு சம்பந்தப்பட்ட வங்கியின் உதவி மையம் எண் ஒன்றை தொடர்பு கொண்டார். அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து சிறிது நேரம் கழித்து வேறொரு எண்ணின் இருந்து நரேந்திரபாபுவிற்கு அழைப்பு வந்தது.

அப்போது பேசிய மர்மநபர், சம்பந்தப்பட்ட வங்கியின் பெயரை கூறி, உங்கள் குறைகளை சரி செய்து கொடுப்பதாக கூறினார். பின்னர் நரேந்திரபாபுவின் வங்கி கணக்கு விவரங்களை அந்த மர்மநபர் கேட்டார்.

வங்கி கணக்கு விவரங்களை கூறியதும், நரேந்திரபாபுவின் செல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்தது. அந்த ஓ.டி.பி. எண்ணையும் நரேந்திரபாபுவிடம் இருந்து மர்மநபர் கேட்டறிந்தார். இதையடுத்து நரேந்திரா பாபுவின் வங்கி கணக்கிற்கு அதிகளவு பணம் வந்தது.

இதனால் நநேரந்திரபாபு மிகவும் சந்தோஷம் அடைந்தார். ஆனால் அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை. இதையடுத்து மறுநாள் நரேந்திரபாபு தனது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை சோதனை செய்தார்.

அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2¼ லட்சம் திருடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது ஆன்லைன் மூலம் வங்கியில் இருந்து பணம் திருடப்பட்டிருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து தன்னுடன் செல்போனில் பேசிய மர்ம நபர்தான் வங்கி விவரங்களை வாங்கி பணத்தை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் மன வேதனை அடைந்த அவர் உடனே இது குறித்து சிந்தாமணி போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story