சபரிமலை கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்


சபரிமலை கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
x

சபரிமலை கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை,

கேரள மாநிலத்தில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, கோவிலின் நடையை திறந்து வைத்தார். அதன்படி, பதினெட்டாம் படி இறங்கி சென்று கோவில் முன் உள் அழி குண்டம் ஏற்றப்பட்டு மண்டல பூஜை தொடங்கியது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருமுடியுடன் வரும் பக்தர்கள் நேற்று முன் தினம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் நேற்று முன் தினம் முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் 4 நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

நடைபெற்று வரும் மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்ற பின், அன்று இரவு சபரிமலை கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்படும். தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

13 இடங்களில் உடனடி முன்பதிவு வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின்னர் புல்மேடு மற்றும் கரிமலை பாதை திறக்கப்பட்டுள்ளது. வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆன்லைன் பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story