பா.ஜனதாவில் இருந்து மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் விலகல்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 2-வது கட்ட பட்டியலில் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிக்கெட் கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அக்கட்சியை விலகினர்.
பெங்களூரு:-
2-வது கட்ட பட்டியல்
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் பா.ஜனதா கடந்த 11-ந் தேதி வெளியிடப்படட் முதல்கட்ட பட்டியலில் 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. இதில் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
இதில் டிக்கெட் கிடைக்காத எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். மந்திரி எஸ்.அங்கார், ஆர்.சங்கர் எம்.எல்.சி., லட்சுமண் சவதி எம்.எல்.சி. ஆகியோர் விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்களில் ஆர்.சங்கர் தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். இந்த பரபரப்பு அடங்காத நிலையில் பா.ஜனதா நேற்று முன்தினம் இரவு 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மூடிகெரே-தீபக் தொட்டய்யா
1. தேவர ஹிப்பரகி-சோமண்ணகவுடா பட்டீல், 2. பசவன பாகேவாடி- பெல்லுப்பி, 3. இண்டி-கசகவுடா பிரதர், 4. குருமித்கல்-லலிதா அனப்பூர், 5. பீதர்-ஈஸ்வர்சிங் தாக்கூர், 6. பால்கி-பிரகாஷ் கன்ட்ரே, 7. கங்கவாதி-பரண்ணா முனவள்ளி, 8. கலகட்டகி-நாகராஜ் சப்பி, 9. ஹனகல்-சிவராஜ் சஜ்ஜன்னர், 10. ஹாவேரி (எஸ்.சி.) -கவிசித்தப்பா தயமண்ணவர், 11. ஹரப்பனஹள்ளி-கருணாகரரெட்டி, 12. தாவணகெரே வடக்கு-லோகிகெரே நாகராஜ், 13. தாவணகெரே தெற்கு-அஜய்குமார்.
14. மாயகொண்டா (எஸ்.சி.) -பசவராஜ் நாயக், 15. சன்னகிரி-சிவக்குமார், 16. பைந்தூர்-குருராஜ் கந்திஹொலே, 17. மூடிகெரே (எஸ்.சி.) -தீபக் தொட்டய்யா, 18. குப்பி-திலீப்குமார், 19. சிட்லகட்டா-ராமச்சந்திர கவுடா, 20. கோலார் தங்கவயல் (எஸ்.சி.) -அஸ்வினி சம்பங்கி, 21. சரவணபெலகொலா-சிதானந்தா, 22. அரிசிகெரே-ஜி.வி.பசவராஜ், எச்.டி.கோட்டை-கிருஷ்ணா நாயக்.
புதிய முகங்கள்
இந்த பட்டியலில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களில் 11 பேருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன. அரிசிகெரே தொகுதியில் எடியூரப்பாவின் உறவினரான சந்தோஷ் என்பவர் டிக்கெட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக அங்கு பசவராஜிக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தோசின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அரிசிகெரேயில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். சாலையில் டயர்களை தீ வைத்து கொளுத்தி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். தான் சுயேச்சையாக போட்டியிட போவதாக சந்தோஷ் அறிவித்துள்ளார். ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர்கள் அழைத்தால் அதுகுறித்து பரிசீலிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேரு ஓலேகர் எம்.எல்.ஏ.
மூடிகெரே தொகுதியில் டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த எம்.பி.குமாரசாமி எம்.எல்.ஏ., சபாநாயகர் காகேரியை சிர்சியில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதன் முலம் அவர் பா.ஜனதாவை விட்டு விலகியுள்ளார். அவர் சிக்கமகளூரு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சி.டி.ரவியை எதிர்த்து போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
அதேபோல் ஹாவேரி தொகுதியில் நேரு ஓலேகார் எம்.எல்.ஏ.வுக்கு டிக்கெட் கிடைக்காததால், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அவர், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தான் தனக்கு டிக்கெட் கிடைக்காமல் செய்துள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார். ஹாவேரி மாவட்டத்தில் பா.ஜனதா எப்படி வெற்றி பெறப்போகிறது என்பதை பார்க்கிறேன் என்று அவர் சவால் விட்டுள்ளார். அவரும் பா.ஜனதாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் ஹாவேரியில் உள்ள ரோட்டில் டயருக்கு தீ வைத்து எரித்து கோபத்தை வெளிப்படுத்தினர்.
நாற்காலிகளை அடித்து நொறுக்கி...
சன்னகிரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள மாடால் விருபாக்ஷப்பா, வீட்டில் ரூ.8 கோடி ரொக்கம் சிக்கியது தொடர்பான வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். இதனால் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கேட்டனர். ஆனால் அங்கு அவரது குடும்பத்தை சாராத ஒருவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாடால் விருபாக்ஷப்பாவின் ஆதரவாளர்கள் கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளளனர்.
அவர்கள் பா.ஜனதா அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்து நாற்காலி, மேசைகளை அடித்து நொறுக்கி கோபத்தை வெளிப்படுத்தினர். துமகூருவில் டிக்கெட் கிடைக்காததால் முன்னாள் மந்திரி சொகடு சிவண்ணா பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் சுயேச்சையாகவோ அல்லது வேறு கட்சியில் சேர்ந்தோ தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார்.
லட்சுமண் சவதி இன்று ராஜினாமா
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான லட்சுமண் சவதி எம்.எல்.சி.க்கு அதானி தொகுதியில் டிக்கெட் வழங்கவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அவர் பா.ஜனதாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர் சமாதானம் ஆகவில்லை. இந்த நிலையில் லட்சுமண் சவதி இன்று (வெள்ளிக்கிழமை) தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். பெங்களூருவில் மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்து அவர் ராஜினாமா கடிதம் வழங்கவுள்ளார்.