ஆந்திரா, தமிழகத்தில் கொள்ளையடித்த 2 பேர் கைது - தங்கம், வெள்ளி பறிமுதல்
ஆந்திரா, தமிழகத்தில் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்கம், வெள்ளி, மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திரா:
திருப்பதியில் உள்ள கிழக்குக் காவல் நிலையம், அலிபிரி மற்றும் திருச்சானூர் காவல் நிலையங்களில் பதிவான 5 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி அந்தந்தப் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பதி-ரேணிகுண்டா சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகில் சந்தேகப்படும் படியாக 2 பேர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அதில் ஒருவர் திருப்பதி ஆட்டோநகரை சேர்ந்த கச்சிலெட்டி வெங்கடேஷ் ஆவார். அவர் ஏற்கனவே 30 வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்றொருவர், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாசரி அஞ்சய்யா. இவர் 20 வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார் என்பது தெரிய வந்தது.
2 பேரும் கூட்டாகச் சேர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 65 கிராம் தங்கம், 500 கிராம் வெள்ளிப் பொருட்கள், 2 மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.