அசாம் கனமழை: 2 போலீசாரை அடித்துச் சென்ற வெள்ளம்
அசாமில் போலீசார் இருவர் ஒரு வழக்கை விசாரிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
கவுகாத்தி,
அசாமில் தொடர்ந்து பெய்த கனமழையால், பல பகுதிகளில் வெள்ளமும், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்துக்கு பலர் உயிரிழந்துள்ளதுடன், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அசாமின் நாகோன் மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு போலீசார் அடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்குள்ள கம்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறும்போது, நேற்று இரவு காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான கம்பூர் போலீஸ் குழுவானது ஒரு வழக்கை விசாரிக்க அங்குள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது இரு போலீசார் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை தேடும்போது, ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் ஒருவரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.