'கோச்சடையான்' பட விவகாரம்; லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் 2 பிரிவுகள் ரத்து - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


கோச்சடையான் பட விவகாரம்; லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் 2 பிரிவுகள் ரத்து - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

'கோச்சடையான்' பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் 2 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

நடிகர் ரஜினிகாந்த் 'கோச்சடையான்' என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தை அவரது மகள் சவுந்தர்யா இயக்கினார். அந்த படத்தை "ஆட் புரு அன்ட் மீடியாஒன் குளோபல் எண்டர்டெய்மென்ட் லிமிடெட்" என்ற நிறுவனம் தயாரித்தது. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு சிவில் கோர்ட்டில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஒரு மனுவை தாக்கல் செய்து, நிதி விஷயங்கள் குறித்து அந்த நிறுவனம் கருத்து கூற தடை உத்தரவு பெற்றார். இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு அந்த தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள மாஜிஸ்ரேட்டு கோர்ட்டில் தனியார் புகார் ஒன்றை தாக்கல் செய்தது. அதை விசாரித்த கோர்ட்டு தடை உத்தரவை நீக்கியதுடன், தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த தனியார் புகார் குறித்து விசாரிக்கவும் போலீசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டு லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு எதிரான வழக்கை தொடர அனுமதி வழங்கியது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் போலீசாரின் குற்றப்பத்திரிகையில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா தீர்ப்பு கூறியுள்ளார். அதில் லதா ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் பாதியை ரத்து செய்துள்ளது. அதாவது அவருக்கு எதிரான ஏமாற்றுதல், தவறான தகவல்களை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு என 2 பிரிவுகளை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் ஆவணங்களை திரித்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து கீழ்கோர்ட்டு தொடர்ந்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு அனுமதித்துள்ளது.


Next Story