மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் செத்தன
சிவமொக்கா அருகே மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் பரிதாபமாக செத்தன. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவமொக்கா:
தொடர் அட்டகாசம்
சிவமொக்கா மாவட்டம் ஆயனூர் அருகே செட்டிஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள், சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி கிராமத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள், கிராமத்தையொட்டி உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வந்தன. இதனால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வந்தனர்.
மேலும் அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். வனத்துறையினர் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
2 காட்டு யானைகள் செத்தன
இந்த நிலையில், அந்தப்பகுதியை சேர்ந்த சந்திரா நாயக் என்ற விவசாயி, காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க தனது தோட்டத்தை சுற்றி வேலி அமைத்து அதற்கு மின் இணைப்பு கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து உணவு தேடி 7 காட்டு யானைகள் செட்டிஹள்ளி கிராமத்துக்குள் புகுந்தன. அவற்றில் 2 யானைகள் சந்திரா நாயக் தோட்டத்துக்குள் வேலியை தாண்டி நுழைய முயன்றன.
அப்போது வேலியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்ததால், வேலியை தொட்டதும் காட்டு யானைகள் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அந்த 2 காட்டு யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன.
உடல்கள் புதைப்பு
இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் காட்டு யானைகள் செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அதுபற்றி தகவல் அறிந்ததும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு யானைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அதேப்பகுதியில் 2 காட்டு யானைகளின் உடல்களும் குழித்தோண்டி புதைக்கப்பட்டது. அப்போது அந்தப்பகுதிக்கு மேலும் சில காட்டு யானைகள் வந்தன. அந்த காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
வனத்துறையினர் விசாரணை
இதையடுத்து தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.