ரெயிலில் இருந்துவிழுந்து இளம் புத்த துறவிகள் 2 பேர் பலி


ரெயிலில் இருந்துவிழுந்து இளம் புத்த துறவிகள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 1:07 PM IST)
t-max-icont-min-icon

நெலமங்களா அருகே ரெயிலில் இருந்து தவறிவிழுந்து இளம் புத்த துறவிகள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரு:-

2 உடல்கள் மீட்பு

பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே பெட்டனகெரே கிராமம் வழியாக யஷ்வந்தபுரத்தில் இருந்து ரெயில்கள் செல்கின்றன. இந்த நிலையில், அந்த வழித்தடத்தில் ரெயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தண்டவாளம் அருகே 2 பேரின் உடல்கள் கிடந்தன.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் பார்வையிட்டனர்.

இளம் புத்த துறவிகள்

மேலும் அங்கு கிடந்த பைகளையும் அவர்கள் எடுத்து சோதனை செய்தனர். அப்போது அதில் குடகு மாவட்டம் குஷால்நகரில் இருந்து வந்ததற்கான பஸ் டிக்கெட்டுகள் இருந்தன.

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நேபாளத்தை சேர்ந்த மிங்க்மா ஷெர்பா மற்றும் அசாமை சேர்ந்த தேஜன் லமா ஆகியோர் என்பது தெரிந்தது. இளம்புத்த துறவிகளான அவர்கள் 2 பேரும் குஷால் நகரில் உள்ள தங்கக்கோவில் தங்கி இருந்து பயிற்சி பெற்று வந்ததும், பெங்களூருவுக்கு வந்த அவர்கள் மைசூருவுக்கு ரெயிலில் பயணித்ததும் தெரிந்தது.

ஓடும் ரெயிலில் இருந்து...

மேலும் அவர்கள் ரெயிலில் படிக்கட்டில் இருந்து பயணித்து இருக்கலாம் எனவும், அந்த சமயத்தில் ரெயில் பெட்டி கதவுகள் மூடப்பட்டு அவர்கள் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்து இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் உயிரிழந்த 2 பேரின் புகைப்படங்களை போலீசார் தங்கக்கோவில் நிர்வாகத்திற்கு அனுப்பி விசாரித்தனர்.

அப்போது கோவில் நிர்வாகத்தினர், தங்களது கோவிலில் தங்கியிருந்து வந்த இளம் புத்த துறவிகள் தான் என உறுதி செய்தது. பின்னர் 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ். ராமையா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story