பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை: கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மண் சேகரிக்க 20 ரதங்கள்- பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்


பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை: கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மண் சேகரிக்க 20 ரதங்கள்-  பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை திறக்கப்படும் நிலையில் கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மண் சேகரித்து வர 20 ரதங்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

பெங்களூரு:

நன்றாக இருக்காது

பெங்களூரு சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேகவுடாவுக்கு 108 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக கர்நாடகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் புனித மண் சேகரித்து கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த புனித மண் சேகரிக்கும் பணிக்கான 20 ரதங்கள் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, அந்த வாகன ரதங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கெம்பேகவுடா மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து, மக்களின் நிம்மதிக்காக பெங்களூருவை அழகான நகரமாக உருவாக்கி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். வரலாற்றை மறந்தால் நமது எதிர்காலம் நன்றாக இருக்காது. அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பது எங்கள் அரசின் நோக்கம் ஆகும். சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பேகவுடா சிலைக்கு வளர்ச்சி சிலை என்று பெயரிட்டுள்ளோம்.

முன்மாதிரியாக திகழ்கிறது

108 அடி உயரத்திற்கு சிலையை நிறுவியுள்ளோம். இதன் திறப்பு விழா வருகிற 11-ந் தேதி நடக்கிறது, இதை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் விமான நிலையத்தில் இறங்கியதும் கெம்பேகவுடா சிலையை வணங்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். கெம்பேகவுடாவின் ஆட்சி நிர்வாகம் 21-வது நூற்றாண்டிலும் முன்மாதிரியாக திகழ்கிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், "கெம்பேகவுடாவால் உருவாக்கப்பட்ட இந்த பெங்களூரு நகரம் சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. இத்தகைய கெம்பேகவுடா ஒட்டுமொத்த கர்நாடகத்தின் தலைவராக பார்க்கப்படுகிறார். மண் பஞ்ச பூதங்களில் ஒன்றாக உள்ளது. அதனால் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏரி, குளங்களில் இருந்து மண் சேகரிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இந்த மண் சேகரிப்பு பணி வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. பெங்களூருவில் இருந்து 20 ரதங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மண் சேகரித்து வரவுள்ளன. மாவட்டங்களுக்கு இந்த ரதங்கள் வரும்போது, பூரண கும்ப மரியாதை அளிக்க வேண்டும்" என்றார்.

இந்த விழாவில் முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, சதானந்தகவுடா, ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

=====

1 More update

Next Story