அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் சேர்க்கப்படுவார்கள் - இந்திய கடற்படை


அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் சேர்க்கப்படுவார்கள் - இந்திய கடற்படை
x

அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

முப்படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டம் ஒன்றுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 14ந்தேதி ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின்படி தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போது அக்னிவீருக்கான கடற்படை ஆட்சேர்ப்பு தொடர்பான முக்கிய விவரங்களை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. www.joinindiannavy.gov.in என்ற இணைய தளத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு 2022 -க்கான பதிவுகள் ஜூலை 1, 2022 முதல் என கூறப்பட்டுள்ளது. கடற்படை ஆட்சேர்ப்பு 2022 -க்கான விண்ணப்ப சரிபார்த்தல் ஜூலை 15 முதல் 30, 2022 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு - அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் நவம்பர் 21, 2022 முதல் மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையில் பணியில் சேரும் அக்னி வீரர்கள் 4 வருட பயிற்ச்சிக்கு பிறகு வணிக கடற்படையில் இணைந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படை பணிக்கு 20% பெண்கள் முதல் தொகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என்றும் பணிக்கு தேர்வாகும் பெண்கள் பல இடங்களில் கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்கு அனுப்பபடுவார்கள் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.


Next Story