கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றி 2 ஆயிரம் போலீசார் குவிப்பு


கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றி 2 ஆயிரம் போலீசார் குவிப்பு
x

பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் இன்று நடைபெறும் விழாவில் முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்க உள்ளதால், ஸ்டேடியத்தை சுற்றி 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பெங்களூரு:-

பலத்த போலீஸ் பாதுகாப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் (மைதானம்) நடைபெறும் விழாவில் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். அத்துடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் ஸ்டேடியத்திற்கு வர இருக்கிறார்கள். இதையடுத்து, கன்டீரவா ஸ்டேடியம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல்

உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பொதுமக்களுக்கு2 நுழைவு வாயில்கள்

இதுதவிர 8 துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை போலீசார் உள்பட 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து 500 போக்குவரத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்கள் வருவதற்காக 2 நுழைவு வாயில்களும், பொதுமக்கள் வருவதற்காக 2 நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில்களில் முழுமையான சோதனை நடத்தப்பட்ட பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள், தீப்பெட்டி, வெடி பொருட்கள் உள்ளிட்டவை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்டேடியத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.


Next Story