2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஆவணங்களின்றி மாற்றம் செய்வது தொடர்பான வழக்கு - டெல்லி ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு


2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஆவணங்களின்றி மாற்றம் செய்வது தொடர்பான வழக்கு - டெல்லி ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு
x

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற பொதுமக்கள் எந்தவித சான்றுகளையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்விணி குமார் உபாத்யாய் ரிட் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளில் மட்டுமே மாற்றம் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி மற்றும் எஸ்.பி.ஐ. அறிவிக்க வேண்டும் எனவும், இதன் மூலம் கருப்பு பணம் மற்றும் சட்டவிரோத பணபறிமாற்றம் கண்டறியப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பராக் பி.திரிபாதி, "இது பணமதிப்பு நீக்கம் அல்ல. இது ஒரு சட்டப்பூர்வமான நடவடிக்கை" என்று தெரிவித்தார். மேலும் பொருளாதார கொள்கை சார் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை சுட்டிக்காட்டிய அவர், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.Next Story