உயர்மட்ட குழுவில் இருந்தும் விலகல்: பண அட்டை வர்த்தகத்துக்கு உடனடியாக மாறமுடியாது மத்திய அரசுக்கு நாராயணசாமி எதிர்ப்பு


உயர்மட்ட குழுவில் இருந்தும் விலகல்: பண அட்டை வர்த்தகத்துக்கு உடனடியாக மாறமுடியாது மத்திய அரசுக்கு நாராயணசாமி எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 Dec 2016 10:15 PM GMT (Updated: 20 Dec 2016 9:26 PM GMT)

மத்திய அரசு அறிவித்துள்ள பண அட்டை வர்த்தகத்துக்கு உடனடியாக மாறமுடியாது. மக்கள் இதை விரும்பாததால் நாங்களும் அதை ஏற்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

மத்திய அரசு அறிவித்துள்ள பண அட்டை வர்த்தகத்துக்கு உடனடியாக மாறமுடியாது. மக்கள் இதை விரும்பாததால் நாங்களும் அதை ஏற்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு அறிவுறுத்தல்

பிரதமர் அலுவலகத்தில் இருந்து புதுவை மாநிலத்தில் முழுமையான வர்த்தகம், தொழில் மற்றும் மக்களின் பண பரிமாற்றங்கள் அனைத்தும் பணஅட்டை மூலம் இருக்கவேண்டும் என்று தலைமை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபின் புதுவை மாநிலத்தில் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. வியாபாரமும் சரிந்து சிறுவியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு வங்கியில் பணம் இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிறைவேற்ற முடியாது

வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் புதிய ரூ.500 நோட்டுகள் இல்லாததால் மக்கள் பணம் எடுத்து செலவழிப்பது பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு சம்பளம் காசோலையாக தருவதால் அதை மாற்றமுடியாமல் அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கு வரவேண்டிய விற்பனை வரி, கலால் வரி குறைந்துள்ளது.

இந்த நேரத்தில் புதுவை மாநிலத்தில் பண அட்டை மூலம்தான் தொழில், வியாபாரம் செய்யவேண்டும் என்பது முடியாத காரியம். நானும், அமைச்சர்களும் இதுகுறித்து கலந்து ஆலோசித்துள்ளோம். பணஅட்டை மூலம்தான் பண பரிமாற்றம் என்பதை முழுமையாக நிறைவேற்ற முடியாது. அதை படிப்படியாகத்தான் செய்ய முடியும்.

திணிக்க விடமாட்டோம்

புதுவை கிராம பகுதிகளில் வங்கிகள், ஏ.டி.எம்.கள் இல்லை. பெரும்பாலான கடைகளில் பண அட்டை மூலம் பணம் செலுத்தும் ஸ்வைப்பிங் மெஷின்கள் இல்லை. எனவே பண அட்டை மூலம் பண பரிமாற்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய முடியாது என்று உள்துறை மற்றும் நிதி மந்திரிகளிடம் கூறிவிட்டேன். இத்திட்டத்தை படிப்படியாகத்தான் அமல்படுத்த முடியும் என்று கூறியுள்ளேன்.

மத்திய அரசின் எந்த ஒரு புதிய திட்டமாக இருந்தாலும் மக்கள் ஏற்காதவரை அந்த திட்டங்களை நாங்களும் ஏற்கமாட்டோம். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் மத்திய அரசு திணிக்கவும் விடமாட்டோம். காய்கறி விற்பவர்கள், பால் கடைக்காரர் போன்றோர்களிடம் ஸ்வைப்பிங் மெஷின்கள் கிடையாது.

விளைவுகளை சந்திக்க தயார்

மத்திய அரசின் திணிப்புகளை எல்லாம் ஏற்கமுடியாது. இதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கத் தயார். இதுதொடர்பாக 23-ந் தேதி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.

பணமில்லா பரிமாற்ற திட்டங்களை செயல்படுத்த ஆந்திர முதல்-மந்திரி தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவில் இருந்து நான் விலகிவிட்டேன். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதமும் அனுப்பிவிட்டேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். 

Next Story