ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை காசோலை, மின்னணு முறை மூலம் வழங்க அவசர சட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்


ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை காசோலை, மின்னணு முறை மூலம் வழங்க அவசர சட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 21 Dec 2016 9:00 PM GMT (Updated: 2016-12-22T02:20:28+05:30)

ஊழியர்களுக்கு தொழில் நிறுவனங்கள் சம்பளத்தை காசோலை, மின்னணு பரிமாற்ற முறையில் வழங்க அவசர சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி,

ஊழியர்களுக்கு தொழில் நிறுவனங்கள் சம்பளத்தை காசோலை, மின்னணு பரிமாற்ற முறையில் வழங்க அவசர சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

அவசர சட்டம்

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து, ரொக்க பணமில்லா மின்னணு பரிமாற்ற முறையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில், தொழில் நிறுவனங்கள், தங்களது தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் அவர்களது மாத சம்பளத்தை காசோலையாகவோ, மின்னணு முறையிலோ வழங்குவதற்கு வகை செய்து, அவசர சட்டம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

சட்ட திருத்தம்

இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “சம்பள பட்டுவாடா சட்டம் 1936-ல் அவசர சட்டம் வாயிலாக திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதலை வழங்கியது. இது, குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களின் அதிபர்கள், தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளத்தை மின்னணு முறையில் அல்லது காசோலை மூலம் வழங்க வகை செய்கிறது” என தெரிவித்தன.

சம்பள பட்டுவாடா சட்டம் பிரிவு 6-ஐ திருத்த வகை செய்து பாராளுமன்றத்தில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது சம்பள பட்டுவாடா சட்டம் (திருத்தம்) மசோதா, 2016-ஐ பாராளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா தாக்கல் செய்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

எதற்காக சட்ட திருத்தம்?

சம்பள பட்டுவாடா சட்டம் 1936, சம்பளத்தை நாணயமாகவோ, ரூபாய் நோட்டுகளாகவோ வழங்க வகை செய்துள்ளது. இப்போது ரூபாய் நோட்டுகளாக வழங்காமல் காசோலையாகவோ, மின்னணு முறையிலோ வழங்குவதற்காகத்தான் அந்த சட்டத்தை திருத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது.

பின்னர் முறைப்படி, இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விடும்.

இதன் மூலம் நிறுவனங்களின் அதிபர்கள், தங்கள் ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சம்பளத்தை இனி காசோலை மூலமோ, வங்கி வழி மின்னணு பரிமாற்றம் மூலமோ வழங்கும்.

இது பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறபடி, ரொக்கமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யும். 

Next Story