மும்பையில் ரூ.3 ஆயிரத்து 600 கோடியில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்


மும்பையில் ரூ.3 ஆயிரத்து 600 கோடியில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 24 Dec 2016 11:00 PM GMT (Updated: 24 Dec 2016 9:10 PM GMT)

மும்பையில் ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை நிறுவப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

மும்பை,

மும்பையில் ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை நிறுவப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை

மராட்டிய பேரரசின் எழுச்சிக்கு அடித்தளம் வகுத்த சத்ரபதி சிவாஜியின் பிரமாண்ட சிலையுடன் கூடிய மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை 11.30 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தார். அவரை கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பூச்செண்டு அளித்து வரவேற்றனர்.

பகல் 2.40 மணி அளவில் கிர்காவ் சவுபதி கடற்கரைக்கு பிரதமர் மோடி காரில் அழைத்து வரப்பட்டார். வழிநெடுகிலும் பாரதீய ஜனதா தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அடிக்கல் நாட்டு விழா

2.45 மணிக்கு பிரதமர் மோடி, கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் முக்கிய மந்திரிகள் 3 சொகுசு படகுகளில், சத்ரபதி சிவாஜி நினைவு மண்டபம் நிறுவப்பட உள்ள கடற்பரப்புக்கு சென்றனர்.

அங்கு வெண்கல கலசத்தில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட புனித நீர் மற்றும் சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் ஆகியவற்றை மதகுருமார்கள் வேதம் ஓத, நினைவு மண்டபத்தின் அடையாளமாக பிரதமர் மோடி கடலில் தெளித்தார். அப்போது, அனைத்து தலைவர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல்களான சத்ரபதி உதயன் ராஜே, சத்ரபதி சாம்பாஜி ரானே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

192 மீட்டர் உயர சிலை

சத்ரபதி சிவாஜி நினைவு சின்னம் கரையில் இருந்து 1½ கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படுகிறது. மேலும், அங்கு ஒரு பீடம் அமைக்கப்பட்டு அதன் மீது குதிரையில் அமர்ந்தவாறு சத்ரபதி சிவாஜி கம்பீரமாக செல்வதை போல் சிலை நிறுவப்படுகிறது.

ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சிலை, 192 மீட்டர் உயரத்துடன்(629 அடி), உலகிலேயே மிக உயரமான சிலை என்ற அந்தஸ்தை பெறுகிறது. அதாவது, அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை காட்டிலும், அதிக உயரத்தில் சிலை தயாராவது குறிப்பிடத்தக்கது.

சத்ரபதி சிவாஜி நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா நிறைவுபெற்றதை தொடர்ந்து, பிரதமர் மோடி பாந்திரா- குர்லா காம்ப்ளக்ஸ் எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். 

Next Story