ஓடுபாதையில் தடுமாறி ஓடிய விமானம் ஒருபக்கமாக சாய்ந்தது மீட்பு பணியின்போது 15 பயணிகள் காயம்


ஓடுபாதையில் தடுமாறி ஓடிய விமானம் ஒருபக்கமாக சாய்ந்தது மீட்பு பணியின்போது 15 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 27 Dec 2016 11:15 PM GMT (Updated: 27 Dec 2016 8:27 PM GMT)

பனாஜி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி தட்டுத் தடுமாறி ஓடி ஒருபக்கமாக சாய்ந்து விபத்துக்கு உள்ளானது. கடற்படை வீரர்களின் மீட்பு பணியின்போது 15 பயணிகள் காயம் அடைந்தனர். துபாய்–மும்பை விமானம் துபாய் நகரில் இ

பனாஜி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி தட்டுத் தடுமாறி ஓடி ஒருபக்கமாக சாய்ந்து விபத்துக்கு உள்ளானது. கடற்படை வீரர்களின் மீட்பு பணியின்போது 15 பயணிகள் காயம் அடைந்தனர்.

துபாய்–மும்பை விமானம்

துபாய் நகரில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 737 ரக போயிங் விமானம் ஒன்று நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் கோவா மாநில தலைநகர் பனாஜியில் உள்ள தபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானம் பனாஜி வழியாக மும்பைக்கு செல்லவேண்டும்.

பின்னர், பனாஜியில் இருந்து காலை 5 மணிக்கு மும்பை நோக்கி அந்த விமானம் புறப்பட்டது. விமானத்தில் 154 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 7 பேர் என மொத்தம் 161 பேர் இருந்தனர்.

தறிகெட்டு ஓடி சாய்ந்தது

அந்த விமானம் ஓடுபாதையில் சிறிதுநேரம் ஊர் சென்று மேல் எழுவதற்கு பதிலாக திடீரென்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. 250 மீட்டர் தூரம் ஓடுபாதையை விட்டு விலகி வேகமாக ஓடிய அந்த விமானம் ஒருபக்கமாக சாய்ந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகளும், ஊழியர்களும் பீதியடைந்து அலறினர்.

விமானம் மேலே எழும்பிச் செல்லாமல் தரைவழியாகவே சென்று ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதை கண்ட விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தபோலிம் விமான நிலையம், தலைநகர் பனாஜியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாஸ்கோ நகரில் அமைந்திருக்கும் இந்திய கடற்படை தளமான ஐ.என்.எஸ். ஹன்சாவில் செயல்பட்டு வருகிறது.

15 பேர் காயம்

இதனால் இதுபற்றிய தகவலை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்த அடுத்த சில நிமிடங்களில் விபத்து நடந்த இடத்துக்கு கடற்படை வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் மின்னல் வேகத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

15 முதல் 20 நிமிடங்களுக்குள் விமானத்துக்குள் பரிதவித்துக் கொண்டிருந்த அத்தனை பேரையும் பத்திரமாக மீட்டனர். எனினும் மீட்பு பணியின்போது 15 பயணிகளுக்கு லேசான காயமும், எலும்பு முறிவும் ஏற்பட்டது. அவர்களில் சிலர் வாஸ்கோவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

விமான சேவை ரத்து

விமான விபத்தை தொடர்ந்து தபோலிம் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. காலை 9 மணி வரை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. பனாஜி வந்த 7 விமானங்கள் மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

மும்பை செல்லவேண்டிய ஜெட் ஏர்வேஸ் பயணிகள் அனைவரும் வேறு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெரும் விபத்து தவிர்ப்பு

இதுபற்றி கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பயணிகளை அப்புறப்படுத்தும் பணி முடிந்ததும், விமானத்தை மீட்கும் பணி தொடங்கியது. ஓடுபாதையின் சேத மதிப்பு குறித்து கடற்படை மற்றும் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மதிப்பிடப்பட்டு வருகின்றனர். உரிய நேரத்தில் பயணிகளை கடற்படை வீரர்கள் மீட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது’’ என்றார்.

இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை அதிகாரிகள் விமான நிலைய ஓடுபாதையின் நிலையையும், சம்பந்தப்பட்ட நிறுவன விமானிகளின் பணி முறை பற்றியும் விசாரித்து வருகின்றனர்.


Next Story