வங்கி கிளைகளில் ரூ.1,300 கோடி டெபாசிட் செய்யப்பட்டதா? ஸ்டேட் பேங்க் விளக்கம்


வங்கி கிளைகளில் ரூ.1,300 கோடி டெபாசிட் செய்யப்பட்டதா? ஸ்டேட் பேங்க் விளக்கம்
x
தினத்தந்தி 28 Dec 2016 10:25 AM GMT (Updated: 2016-12-28T15:55:17+05:30)

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஐயின் பல்வேறு வங்கிகிளைகள் மூலம் ரூ.1,300 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இடாநகர்,

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஐயின் பல்வேறு வங்கிகிளைகள் மூலம் ரூ.1,300 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக சர்ச்சை  எழுந்த நிலையில், இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று  வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்.பி.ஐ வங்கியின் பிராந்திய மேலாளர் சக்யா சின்ஹா பைராகி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- “ உடனடியாக நாங்கள் எங்களின் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தோம். ஆனால், தகவல் வெளியானது போல் இடாநகர் பிராந்தியத்துக்குட்பட்ட  எந்த ஒரு வங்கி கிளையிலும் இந்த தொகை டெபாசிட் செய்யப்படவில்லை. இடாநகர் பிராந்தியத்தில் 43 வங்கி கிளைகள் உள்ளன. இவற்றில் 26 கிளைகள் அருணாச்சல பிரதேசத்தில் வருகின்றன.

26 வங்கி கிளைகளிலும் சேர்த்து நவம்பர் 8 ஆம் தேதி கடைசியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 1595 கோடியாக இருந்தது. டிசம்பர் 24 தேதி கடைசியில் ரூ.1748 கோடியாக உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட 45 நாட்களில் டெபாசிட் வித்தியாசம் ரூ.153 கோடியாக உயர்ந்துள்ளது. 

உண்மை  தகவல்களை அறியாமல் இதுபோன்ற தவறுதலான செய்திகள் ஊடகங்களில் வெளியாவதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். சமூகத்தின் நான்காவது தூண் என்று சொல்லக்கூடிய ஊடகங்கள் இத்தகைய செயலை செய்வதை கண்டிக்கிறோம். அதேவேளையில், இதுபோன்ற தவறுதலான செய்திகளை பரப்பி அனைவரது கவனத்தையும் பெற முயற்சிக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ‘

இத்தகைய செய்திகள், இந்தியாவின் முதன்மை வங்கி மற்றும் ஓய்வின்றி உழைக்கும் வங்கி ஊழியர்களின் நற்பெயரை பாதித்துள்ளது.  முதன்மை வங்கியாக நாங்கள் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி வருகிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு எஸ்.பி.ஐ வங்கியின் ஊழியர்களின் ஒத்துழைப்பு, அர்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவற்றை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். மாநில, மத்திய அரசுகளும் பல்வேறு நிலைகளிலும் பாராட்டியுள்ளது. இதேபோன்ற பாராட்டுக்களையும் ஊக்கத்தையும் அனைத்து ஊடகங்களிடமும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story