விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு மன்மோகன்சிங், ப.சிதம்பரம் உதவினார்கள் பா.ஜனதா குற்றச்சாட்டு


விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு மன்மோகன்சிங், ப.சிதம்பரம் உதவினார்கள் பா.ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Jan 2017 10:30 PM GMT (Updated: 30 Jan 2017 9:36 PM GMT)

விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு மன்மோகன்சிங்கும், ப.சிதம்பரமும் உதவினார்கள் என்று கடித ஆதாரங்களுடன் பா.ஜனதா குற்றச்சாட்டு.

புதுடெல்லி,

விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும், நிதி மந்திரி ப.சிதம்பரமும் உதவினார்கள் என்று கடித ஆதாரங்களுடன் பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

மல்லையா எழுதிய கடிதங்கள்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ‘கிங் பி‌ஷர்’ நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா பல கோடி கடன் பெறுவதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கும், நிதி மந்திரி ப.சிதம்பரமும் உதவியதாக செய்தி வெளியானது. இதுதொடர்பாக விஜய் மல்லையா அவர்களுக்கு மெயில்கள் மூலம் அனுப்பியுள்ள கடித விவரங்களும் வெளியானது.

இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:–

அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கின் முதன்மை செயலாளர் புலோக் சட்டர்ஜி, மல்லையா தொடர்பான பல கோப்புகளை பிரதமரின் இல்லத்தில் இருந்து சோனியா காந்தியின் இல்லத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதன்மூலம் விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு காங்கிரஸ் உதவி செய்தது என்பது வெளிப்
படையாக தெரிகிறது.

விளக்கம் அளியுங்கள்

சோனியா காந்தியும் உதவி செய்தாரா?, யாருடைய உத்தரவின் பேரில் ‘கிங் பி‌ஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு கடன்கள் வழங்க அனுமதி கிடைத்தது என்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.

2011–ம் ஆண்டு நவம்பர் 14–ந் தேதி மல்லையா அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்திற்கு பின்னர், மன்மோகன்சிங் செய்தியாளர்களிடம், ‘கிங்பி‌ஷர் நிறுவனம் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை நாங்கள் காண இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

மன்மோகன்சிங்குக்கு மல்லையா எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில், வங்கிகள் கடன்களை உடனடியாக வழங்குவதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இடைக்காலத்தில் இந்த வி‌ஷயத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு பின்னர் இன்னொரு கடிதத்தில், தான் இப்போது நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக மல்லையா கூறியுள்ளார்.

ப.சிதம்பரத்துக்கு கடிதம்

இதற்காக பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மல்லையா குறிப்பிட்டுள்ளவைகளை செய்து
கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு பேசியுள்ளார்.

வங்கிகள் கூட்டமைப்பின் தலைமை கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் வசூலிக்கப்படாத கடன்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டநிலையில், அதன் மது ஆலை ஒரு புதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தது. அப்போது 2013–ம் ஆண்டு மார்ச் மாதம் மல்லையா ப.சிதம்பரத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து தடையில்லா சான்றிதழ் வழங்க உதவும்படி அவர் கேட்டுள்ளார்.

எனவே ஊழல்வாதிகள் கையில் காங்கிரஸ் இருந்தது என்பது வெளிப்படையாக தெரிகிறது. மல்லையாவை தப்பவிட்டது காங்கிரஸ் தான். பா.ஜனதா ஒரு நாளும் தவறானவர்களுக்கு உதவாது. மல்லையா இந்தியா திரும்பி, விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.

இவ்வாறு சம்பித் பத்ரா கூறினார்.

காங்கிரஸ் கண்டனம்

இது தேர்தலை கருத்தில் கொண்டும், அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் மன்மோகன்சிங் மீது புகார் கூறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story