சாகும் முன் தந்தையிடம் உதவி கேட்டு கதறிய சிறுமி விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு


சாகும் முன் தந்தையிடம் உதவி கேட்டு கதறிய சிறுமி விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 17 May 2017 10:15 PM GMT (Updated: 2017-05-18T02:57:21+05:30)

ஆந்திராவில், புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி சாகும் முன், சிகிச்சை பெற பணத்துக்காக தந்தையிடம் உதவி கேட்டு கதறிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

விஜயவாடா,

ஆந்திராவில், புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி சாகும் முன், சிகிச்சை பெற பணத்துக்காக தந்தையிடம் உதவி கேட்டு கதறிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சாய்ஸ்ரீ (வயது 13). கருத்து வேறுபாடு காரணமாக சிறுமி சாய்ஸ்ரீயின் பெற்றோர் பிரிந்து விட்டனர். இதனால் தாய் சுமாஸ்ரீ பராமரிப்பில் சாய்ஸ்ரீ வாழ்ந்தார்.

எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய அவருடைய தாய் கடுமையாக போராடினார். ஏற்கனவே பல லட்ச ரூபாய் செலவு செய்து விட்டதால், மேலும் சிகிச்சையை தொடர பணம் தேவைப்பட்டது. இதனால் தன் பெயரில் உள்ள வீட்டை விற்று மகளின் உயிரை காப்பாற்ற சுமாஸ்ரீ முடிவு செய்தார்.

ஆனால் இதற்கு சாய்ஸ்ரீயின் தந்தை இடையூறு செய்து வந்தார். பணம் இல்லாமல் மேற்கொண்டு சிகிச்சையை தொடர முடியாததால், சாய்ஸ்ரீ கடந்த 14-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

தந்தையிடம் உதவி கேட்டு கதறல்

சாய்ஸ்ரீ இறப்பதற்கு முன்பு தன் தந்தைக்கு உருக்கமாக ‘வாட்ஸ்-அப்’ மூலம் வீடியோ ஒன்றை அனுப்பி இருந்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், “அப்பா... உங்களிடம் பணம் இல்லை என்று சொல்லி விட்டீர்கள். எங்களிடம் இருக்கும் வீட்டையாவது விற்க அனுமதி தாருங்கள். சிகிச்சை அளிக்காவிட்டால் நான் அதிக நாள் உயிரோடு இருக்க முடியாது என்று டாக்டர்கள் கூறி விட்டனர். என் உயிரை காப்பாற்றுங்கள்” என கண்ணீர் விட்டு கதறியபடி பேசி உள்ளார்.

விசாரணை நடத்த உத்தரவு

இந்த சம்பவம் மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. 

Next Story