தேசிய அளவில் போராட்டம் நடத்த திட்டம்: அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்பு குழு அமைப்பு டெல்லியில் அய்யாக்கண்ணு பேட்டி


தேசிய அளவில் போராட்டம் நடத்த திட்டம்: அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்பு குழு அமைப்பு டெல்லியில் அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 22 May 2017 12:00 AM GMT (Updated: 21 May 2017 9:21 PM GMT)

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அளவில் போராட்டம் நடத்துவதற்காக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக டெல்லியில் அய்யாக்கண்ணு கூறினார்.

புதுடெல்லி,

‘விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதிகள் இணைப்பு’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோரை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

மீண்டும் டெல்லி சென்றனர்

பின்னர் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசியும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அய்யாக்கண்ணு தலைமையில் 20 விவசாயிகள் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர்.

அங்கு ஏற்கனவே அவர்கள் போராட்டம் நடத்திய ஜந்தர் மந்தர் பகுதியில் முகாமிட்டனர். ஏற்கனவே திட்டமிட்டபடி உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகளும் தமிழக விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவதற்காக அங்கு வந்தனர். ஆனால் அங்கு ஆலோசனை நடத்த வசதி இல்லாத சூழல் ஏற்பட்டது.

முக்கிய முடிவுகள்

எனவே அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் அருகில் உள்ள குருநானக் கோவில் வளாகத்துக்கு சென்று ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:–

எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. இதனால் நாங்கள் அகில இந்திய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்து ஆலோசனையில் ஈடுபட்டோம். இதற்காக ‘அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம். இதன் வட இந்திய தலைவராக உத்தரபிரதேச மாநில விவசாயிகள் சங்க தலைவர் வி.எம்.சிங் தேர்ந்து எடுக்கப்பட்டார். தென் இந்திய தலைவராக நான் (அய்யாக்கண்ணு) தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.

முதல்–அமைச்சருடன் சந்திப்பு

மேலும் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு உள்பட 5 பிராந்தியங்களுக்கு தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தவிர 21 செயலாளர்கள், 150 பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்ந்து எடுக்கப்படுவர். இந்த நிர்வாகிகள் தேர்வுக்குப்பின் அடுத்த மாதம் (ஜூன்) 9–ந் தேதி டெல்லியில் மீண்டும் கூட்டம் நடைபெறும். அதில் அகில இந்திய அளவில் நடத்தப்போகும் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

முன்னதாக வருகிற 30–ந் தேதி தமிழக முதல்–அமைச்சரை நான் சந்திக்க இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தமிழக விவசாயிகள் ஊருக்கு புறப்பட ஆயத்தமானார்கள்.


Next Story