சவூதி அரேபியாவில் விற்கப்பட்ட இந்திய பெண் பாதுகாப்புடன் இந்தியா திரும்பினார்


சவூதி அரேபியாவில் விற்கப்பட்ட இந்திய பெண் பாதுகாப்புடன் இந்தியா திரும்பினார்
x
தினத்தந்தி 31 May 2017 4:39 PM GMT (Updated: 31 May 2017 4:39 PM GMT)

சவூதி அரேபியாவில் விற்கப்பட்டு கொடுமைக்கு ஆளான இந்திய பெண் சுக்வந்த் கவுர் இன்று நாடு திரும்பினார்.

ஜலந்தர்,

அமிர்தசரசில் உள்ள சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த கவுரை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர், முன்னாள் பஞ்சாப் மந்திரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்தியா வந்தடைந்த கவுர் வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

இந்தியாவிற்கு பாதுகாப்புடன் திரும்பி வந்தது புதிய பிறப்பு ஆகும்.  சுவராஜ் தலையிடவில்லை எனில், இந்தியாவில் எனது குடும்பத்துடன் நான் இணைந்திருக்க முடியாது என கண்ணீருடன் கவுர் கூறினார்.

பஞ்சாபின் ஜலந்தர் நகரை சேர்ந்தவர் சுக்வந்த் கவுர் (வயது 55).  இவரது கணவர் குல்வந்த் சிங்.  கடந்த ஜனவரியில் டெல்லியை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் உதவியுடன் கவுர் 3 மாத சுற்றுலா விசாவில் சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.  ஆனால் அங்கு உள்ளூர்வாசி ஒருவரிடம் விற்கப்பட்டு கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

இதுபற்றி கவுரின் கணவர் குல்வந்த் சிங் கூறும்பொழுது, துபாய்க்கு சென்று சேர்ந்தபின் ஒரு வாரம் வரை தொலைபேசி வழியே எனது மனைவி தொடர்பில் இருந்துள்ளார்.  ஆனால், ஒரு சில நாட்கள் சென்ற பின்னர், மனைவியின் தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது.  ஏஜெண்டும் என்னுடைய தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில், மே 7ந்தேதி சவூதி அரேபியாவின் ஹெயில் சிட்டி பகுதியில் அமைந்த மருத்துவமனையில் இருந்து குல்வந்தை தொடர்பு கொண்ட அவரது மனைவி, உள்ளூர்வாசியிடம் தன்னை ஏஜெண்டு விற்று விட்டார்.  அங்கு அடிமை போல் வேலை வாங்கினர்.  என்னை மோசமான முறையில் நடத்தினர்.  கொடுமைப்படுத்தவும் செய்தனர் என கூறியுள்ளார்.

இந்த தகவலை குல்வந்த் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.  இது செய்தியாக வெளிவந்துள்ளது.  இதனை கவனித்த சுஷ்மா சுவராஜ் அந்த பெண்ணை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார்.

சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகமும் கவுரின் குடும்பத்தினரிடம் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்தனர்.

Next Story