ஜி.எஸ்.டி.வரி குறித்து மோடி ஆய்வு பொருளாதாரத்துக்கு திருப்புமுனையாக இருக்கும்


ஜி.எஸ்.டி.வரி குறித்து மோடி ஆய்வு பொருளாதாரத்துக்கு திருப்புமுனையாக இருக்கும்
x
தினத்தந்தி 6 Jun 2017 12:00 AM GMT (Updated: 6 Jun 2017 5:22 AM GMT)

ஜூலை 1–ந் தேதி அமலாக உள்ள ஜி.எஸ்.டி. வரியின் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது, நாட்டின் பொருளாதாரத்துக்கு திருப்புமுனையாக இது இருக்கும் என்றும் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

இந்தியாவில் மறைமுக வரி திட்டங்களை சீரமைத்து ‘சரக்கு மற்றும் சேவை வரி’ (ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. அடுத்த மாதம் (ஜூலை) 1–ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து நேற்று டெல்லியில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கான தயார்நிலை குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, நிதி மந்திரி அருண் ஜெட்லி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சக அலுவலக உயர் அதிகாரிகள், அமைச்சக செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஆய்வு

சுமார் 2½ மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி குறிப்பாக ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதற்கான தகவல்தொழில்நுட்பம், மனிதவளம், பயிற்சி, திறமையான அதிகாரிகள், சந்தேகங்களை போக்கும் வழிகள், கண்காணிப்பு ஆகிய அம்சங்களின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஜி.எஸ்.டி. ஜூலை 1–ந் தேதி அமல்படுத்துவதற்கு ஏற்ப தகவல்தொழில்நுட்ப கட்டமைப்பு, அதிகாரிகளுக்கான பயிற்சி, வங்கிகள் ஒருங்கிணைப்பு, வரி செலுத்துவோர் பட்டியல் போன்ற அனைத்தும் தயாராக உள்ளதாக பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.

மின்னணு பாதுகாப்பு

ஜி.எஸ்.டி.யுடன் இணைக்கப்பட்ட தகவல்தொழில்நுட்பத்தில் மின்னணு பாதுகாப்பில் (சைபர்–செக்யூரிட்டி) அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

அனைத்து வரி செலுத்துவோர், அரசியல் கட்சிகள், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவைகளை சார்ந்தவர்களின் கருத்தொற்று மைக்கு பின்னர் ஜூலை 1–ந் தேதி ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படுகிறது. ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி என்பது சாதாரண மனிதருக்கு பலனை தரும்.

பொருளாதார திருப்புமுனை

இது இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத தருணம். நாட்டின் பொருளாதாரத்துக்கு இது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஜி.எஸ்.டி. சந்தேகங்களுக்கு பதில் தெரிவிப்பதற்காக டு விட்டர் சமூக வலைத்தளத்தில்   @ணீsளீநிst_நிளிமி   என்ற முகவரி தொடங்கப்பட்டுள்ளது. 1800–1200–232 என்ற அகில இந்திய இலவச தொலைபேசி எண்ணும் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story