பீகாரில் திருடியதாக 2 இளைஞர்களை மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்


பீகாரில் திருடியதாக 2 இளைஞர்களை மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 6 Jun 2017 10:55 AM GMT (Updated: 6 Jun 2017 10:55 AM GMT)

திருமண வீட்டில் நாற்காலியை திருடியதாக 2 இளைஞர்களை கிராம மக்கள் மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து அடித்த உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள சோன்பர்ஸா என்ற கிராமத்தில் மஹான்கு பிந்த் என்பவர் வீட்டில் திருமணம் நடைபெற்றது.  திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகு திருமண நிகழ்ச்சிக்காக வாடகைக்கு வாங்கிய நாற்காலிகளை சரிபார்த்த போது 5 நாற்காலிகள் காணாமல் போனது தெரியவந்தது.

இந்நிலையில் நாற்காலிகள் காணாமல் போனதற்கு அதே கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் பீர்பால் தான் காரணம் என சந்தேகித்து உள்ளார். பின்னர்  அவர்கள் இருவரையும்  அடித்து இழுத்து வந்து மரத்தில்  தலைகீழாக கட்டி வைத்தார்  மஹான்கு பிந்த்.அவருடன் சேர்ந்து சில கிராம மக்கள் அந்த இளைஞர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். சம்பவம் குறித்து அறிந்து வந்த இளைஞர்களின் உறவினர்கள் திருட்டுப்போன 5 நாற்காலிக்கும் ரூ.3,000 பணத்தை மஹான்குவிடம் கொடுத்து மீட்டு சென்றனர்.

இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவி அம்மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்குமாறு அந்த ஊர் போலீசாருக்கு மாவட்ட காவல்துறை அதிகாரி உத்தரவிட்டார். உத்தரவின் பேரில்  இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மஹான்கு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய மஹான்கு பிந்த் உள்ளிட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story