80 வயது மூதாட்டியின் கையை உடைத்த ம. பி. போலீஸ்


80 வயது மூதாட்டியின் கையை உடைத்த ம. பி. போலீஸ்
x
தினத்தந்தி 12 Jun 2017 12:00 PM GMT (Updated: 12 Jun 2017 11:59 AM GMT)

கல்லெறிந்த போராட்டகாரர்களை மறைத்து வைத்திருப்பதாக மத்தியபிரதேச போலீசார், சந்தேகப்பட்டு ஒரு மூதாட்டியை அடித்து போலீசார் கை எலும்பை உடைத்தனர்.

போபால்

மத்தியபிரதேசம் போபாலில் இருந்து 25 கி மீ தூரத்தில் உள்ள பாண்டாகாலா என்னும் இடத்தில் வசிப்பவர் 80 வயதான கமலாபாய் மேவாடே

இவர் தனது கணவர், மகன்கள், மற்றும் பேரன்களுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று, அவர் வீட்டில் மிக அருகில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் சிலர் போலீஸ் மீது கற்களை வீசியதால் சில போலீசார் காயம் அடைந்தனர்.

கற்களை வீசி விட்டு தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீஸ் விரட்டியபடி, கமலாபாயின் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அவர் தன் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார்.

கல்லெறிந்த போராட்டகாரர்களை மறைத்து வைத்திருப்பதாக மூதாட்டி மீது போலீசார் குற்றம் சாட்டினர்.அதை மறுத்த கமலாபாய், வீட்டில் எங்கும் சோதனை நடத்தலாம் எனவும் சொல்லி இருக்கிறார்.

அதைக் காதில் வாங்காத போலீசார், கமலாபாய், மற்றும் அவர் கணவர் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.மகன்கள், மற்றும் பேரன்களையும் போலீசார் விட்டு வைக்கவில்லை.

தானோ, தன் குடும்பத்தினரோ, இந்த போராட்டத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் இல்லை என அவர்கள் கதறியும் போலீசார் விடாமல் அடித்து நொறுக்கினார்கள்.

இந்த தாக்குதலில் கமலாபாய் அவரின் கை எலும்பு முறிந்தது.கணவரின் காலில் அடிபட்டது. அனைவரின் மேலும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.Next Story