ராஜஸ்தானில் இருந்து பசுக்களை லாரியில் ஏற்றி வந்த தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல்


ராஜஸ்தானில் இருந்து பசுக்களை லாரியில் ஏற்றி வந்த தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 12 Jun 2017 10:45 PM GMT (Updated: 12 Jun 2017 10:45 PM GMT)

ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு பசுக்களை ஏற்றி வந்த லாரிகள் மீது பசு பாதுகாவலர்கள் கற்களை வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு பசுக்களை ஏற்றி வந்த லாரிகள் மீது பசு பாதுகாவலர்கள் கற்களை வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் தமிழக அதிகாரிகளை தாக்கியதுடன், ஒரு லாரியை தீ வைத்து கொளுத்தவும் முயன்றனர்.

பசுக்கள் கொள்முதல்

தமிழக அரசின் கால்நடை துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் அதிக பால் தரும் கலப்பின பசுக்களை வாங்குவதற்காக அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். அங்குள்ள ஜெய்சல்மர் நகரின் சுற்று வட்ட பகுதிகளில் 50 பசுக்கள் மற்றும் கன்று குட்டிகளை கொள்முதல் செய்தனர். இவற்றை கொண்டு வருவதற்காக தேவையான தடையில்லா சான்றிதழ் மற்றும் அனைத்து ஆவணங்களையும் முறைப்படி பெற்றனர்.

இதையடுத்து அவற்றை 5 லாரிகளில் ஏற்றினர். நேற்றுமுன்தினம் இரவு அந்த லாரிகள் ராஜஸ்தானில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 15–ல் பார்மர் மாவட்டத்தில் உள்ள சதார் நகர் அருகே வந்து கொண்டிருந்தன.

சரமாரி கல்வீச்சு

இதற்கிடையே அந்த லாரிகளில் உள்ள பசுக்களும், கன்றுக்குட்டிகளும் இறைச்சிக்காக தமிழ்நாட்டுக்கு கடத்தி செல்லப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த பசு பாதுகாவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சதாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பசுக்கள் ஏற்றி லாரிகளை மறித்தனர். அப்போது அந்த லாரிகள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதலும் நடத்தினர்.

தீவைத்து கொளுத்த முயற்சி

தமிழக அதிகாரிகள், லாரி டிரைவர்கள், கிளீனர்களை அடி–உதைத்தனர். இதில் சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. ஒரு லாரியை தீ வைத்து கொளுத்தவும் முயன்றனர். எனினும் சம்பவ இடத்துக்கு போலீசார் உடனடியாக செல்லவில்லை. இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்தது.

அங்கு மிகவும் தாமதமாக சென்ற சதார் போலீசார் பசு பாதுகாவலர்கள் மேலும் தாக்குதல் நடத்தாமல் தடுத்து நிறுத்தினர். தமிழக அதிகாரிகள், லாரி டிரைவர்கள், கிளீனர்களை மீட்டு சதார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

நடவடிக்கை எடுக்கவில்லை

அங்கு போலீசாரிடம் பசுக்களையும், கன்றுக் குட்டிகளையும் பால்வள பெருக்கத்துக்காக தமிழக அரசு சார்பில் வாங்கி செல்வதாக தமிழக அதிகாரிகள் எவ்வளவோ எடுத்து கூறியும், உரிய ஆவணங்களை காண்பித்தும் போலீசார் தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தமிழக அரசு இப்பிரச்சினையை ராஜஸ்தான் மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றது.

பசுக்கள் மீட்பு

இதைத்தொடர்ந்து பார்மர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேலும் ஏராளமானோர் கூடி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.

நிலைமை மோசம் அடைந்ததை தொடர்ந்து மாவட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் பசுக்களையும், கன்றுகளையும் மீட்டு பாதுகாப்பான ஓரிடத்தில் வைத்தனர்.

50 பேர் மீது வழக்கு பதிவு

இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாமல் பணியில் அலட்சியமாக நடந்து கொண்டதாக சதார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய்ராம், சப்–இன்ஸ்பெக்டர்கள் துருவ் பிரசாத், மஜித் மற்றும் 2 ஏட்டுகள், 2 போலீஸ்காரர்கள் என 7 பேரை பணியிடை நீக்கம் செய்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ககன்தீப் சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story