சிக்கிம் எல்லையில் சீனாவின் சாலைப்பணிகளால் மோதல் இந்தியா–சீனா படை குவிப்பால் பதற்றம்


சிக்கிம் எல்லையில் சீனாவின் சாலைப்பணிகளால் மோதல் இந்தியா–சீனா படை குவிப்பால் பதற்றம்
x
தினத்தந்தி 1 July 2017 4:45 AM IST (Updated: 1 July 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

சிக்கிம் எல்லையில் சீனாவின் சாலைப்பணிகளால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சிக்கிம் எல்லையில் சீனாவின் சாலைப்பணிகளால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் அங்கே படைகளை குவித்து வருவதால் பதற்றம் நீடித்து வருகிறது.

காஷ்மீரில் இருந்து அருணாசல பிரதேசம் வரை 3,488 கி.மீ. எல்லைப்பகுதியை இந்தியாவும், சீனாவும் பகிர்ந்துள்ளன. இதில் 220 கி.மீ. பகுதி சிக்கிமில் வருகிறது. சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்தியா–சீனா–பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பு உள்ளது.

டோக்லாம் (டோங்லாங்) என அழைக்கப்படும் இந்த பகுதியில் சீனா சாலை அமைத்து வருகிறது. சுமார் 40 டன் வரை எடை கொண்ட ராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்களை எல்லைப்பகுதிக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் சீனா இந்த சாலைப்பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிறது.

தனது ராணுவ முகாம் அமைந்துள்ள சொம்பல்ரி பகுதியை நோக்கி சீனா சாலை அமைப்பதாக குற்றம் சாட்டியுள்ள பூடான், இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதைப்போல சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய ராணுவம், சமீபத்தில் அந்த சாலைப்பணிகளை தடுத்து நிறுத்தியது.

இதனால் இந்தியா–சீனா வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த பகுதி தனக்கு செந்தமானது என தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வரும் சீனா, இந்தியப்படைகள் அத்துமீறி நுழைந்து இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறது. எனினும் இரு நாடுகளும் தங்கள் நிலைகளில் இருந்து கொஞ்சமும் பின்வாங்க மறுத்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து சீனா சுமார் 3 ஆயிரம் வீரர்களை அங்கே குவித்து உள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை முச்சந்திப்பு எல்லைக்கு அனுப்பி வைத்து உள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் மேற்கொண்ட கொடி கூட்டம் மற்றும் சில பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் மோதல் போக்கு தற்போது உருவாகி இருப்பதாக எல்லை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிம் எல்லை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று முன்தினம் சிக்கிம் விரைந்தார். தலைநகர் காங்டாக்கில் 17–வது படைப்பிரிவு தலைமை அலுவலகம் மற்றும் கலிம்பாங்கில் உள்ள 27–வது படைப்பிரிவு அலுவலகங்களில் ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த படைகள்தான் சிக்கிம் கிழக்கு எல்லையை பாதுகாக்கும் பொறுப்பினை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே சீனா–பூடான் சர்ச்சையில் இந்தியா ஒரு மூன்றாவது நபர் என சீனா கூறியுள்ளது. டோக்லாம் பகுதி தங்களுக்கு சொந்தமானது எனவும், அப்பகுதியில் தங்களுக்கு மறுக்க முடியாத இறையாண்மை இருப்பதாகவும் கூறியுள்ள சீனா, இது தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லு காங்க் கூறுகையில், ‘சிக்கமில் உருவாகி உள்ள மோதல் தொடர்பாக இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த எந்த தடையும் இல்லை. டோக்லாம் பகுதியில் இருந்து இந்திய படைகளை திரும்ப பெறுவதற்காக அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

சிக்கிம் எல்லையில் சீனா மேற்கொண்டு வரும் சாலைப்பணிகள் குறித்து கவலை வெளியிட்டு உள்ள இந்தியா, இந்த நடவடிக்கைகளால் எல்லை நிலவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவதுடன், கடுமையான பாதுகாப்பு தாக்கங்களையும் ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவுடன் எல்லை தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே இந்தியா விரும்புவதாகவும் கூறப்பட்டு உள்ளது. எல்லையில் அனைத்து தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டை வெளிப்படுத்தி, அவர்களின் இருதரப்பு புரிந்துணர்வுகளுக்கு ஏற்ப நடப்பதுடன், அங்குள்ள சூழலை தன்னிச்சையாக மாற்றுவதை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது.

இந்தியா–சீனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சிக்கிமின் நதுலா வழியான மானசரோவர் யாத்திரை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும் உத்தரகாண்டின் லிரீலேக் வழியான யாத்திரை வழக்கம் போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story