ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 1 July 2017 2:48 PM IST (Updated: 1 July 2017 2:49 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு,

காஷ்மீரின் அனந்தனாக் மாவட்டத்தில் உள்ள தாய்ல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய 
தகவல் கிடைத்துள்ளது.  இதனையடுத்து, இன்று காலை  பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் பதுங்கி கொண்டு பாதுகாப்பு படையினரை நோக்கி  சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இரு தரப்பினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் சிக்கி அப்பகுதி பெண் ஒருவர் பலியானார். பல மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைசேர்ந்தவர்கள் ஆவர். லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தளபதியான பஷீர் லஷ்காரி  சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஆவார் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் ஜம்மு காஷ்மீரில் போலீஸ் அதிகாரி பெரோஷ் அகமது தார் உள்ளிட்ட ஆறு காவல்துறையினர்  கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு  பஷிர் லஷ்காரிதான் முக்கிய காரணம் என்று நம்பப்படுகிறது. பயங்கரவாதிகளுடனான சண்டையின் போது படுகாயம் அடைந்த  ஷதாப் அகமது சோபான் என்ற இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். இதற்கிடையில், காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையை கண்டித்து   உள்ளூர் மக்கள் சிலர்  கல் எறிந்த  சம்பவமும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story