காஷ்மீரில் லஷ்கர்–இ–தொய்பா தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை


காஷ்மீரில் லஷ்கர்–இ–தொய்பா தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
x
தினத்தந்தி 2 July 2017 4:45 AM IST (Updated: 2 July 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் லஷ்கர்–இ–தொய்பா தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் லஷ்கர்–இ–தொய்பா தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பெண் உள்பட மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீரில் ஆங்காங்கே நாசவேலைகளில் ஈடுபடும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மாநில போலீசாருடன் இணைந்து ராணுவம் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

அங்குள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் டயல்காமுக்கு அருகே பிரெண்டி–பத்போராவில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று அதிகாலையில் தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாநில போலீஸ் அதிரடிப்படையினருடன் இணைந்து, ராணுவம் அந்த பகுதியை சுற்றி வளைத்தது.

பின்னர் பாதுகாப்பு படையினர் அங்கே தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், கிராம மக்கள் 17 பேரை மனித கேடயமாக பிடித்து வைத்துக் கொண்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். உடனே சாதுரியமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர், கிராம மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

இதைத்தொடர்ந்து அங்கே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது திருப்பி தாக்குதல் நடத்தினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் லஷ்கர்–இ–தொய்பா பயங்கரவாத தளபதியான பஷிர் லஷ்கரி எனவும், மற்றொருவர் ஆசாத் தாதா என்றும் தெரிய வந்தது.

இந்த துப்பாக்கிச்சண்டையின் போது தஹிரா (வயது 44) என்ற பெண் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் காயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு தஹிராவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாத தளபதி பஷிர் லஷ்கரி, அங்கு நடந்த பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர் ஆவார். கடந்த மாதம் 16–ந்தேதி அச்சபெல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 6 போலீசாரை இந்த பஷிர் லஷ்கரியும், அவரது குழுவினரும் சேர்ந்துதான் கொலை செய்தனர். எனவே அவரை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடிவந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததும், ஏராளமான பொதுமக்கள் அங்கே கூடி பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர்.

ஆனால் போராட்டம் ஓயாததை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ‌ஷடாப் அகமது சோப்பன் (21) என்ற வாலிபர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story