காற்றாடிகளை பறக்கவிட பயன்படுத்தும் மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை
காற்றாடிகளை பறக்கவிட பயன்படுத்தும் மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
புதுடெல்லி,
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. காற்றாடிகளை பறக்கவிட மாஞ்சா நூலை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனிநபர்கள் மற்றும் ‘பீட்டா’ உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், ‘‘மாஞ்சா நூலை காற்றாடி விடுவதற்கு பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக மனிதர்கள், பறவைகள், விலங்குகளின் உயிருக்கு மாஞ்சா நூலால் ஆபத்து உள்ளது. மாஞ்சா நூலில் சிக்கி ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நூலில் கண்ணாடித்தூள், உலோகங்கள், கூர்மையான பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. எனவே இந்த நூலை முற்றிலுமாக தடை செய்யவேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று நடந்தது. விசாரணைக்கு பிற நீதிபதிகள் அமர்வு அதிரடியாக பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
நாடு முழுவதும் தடைநமது நாட்டில் திருவிழாக்களின்போது பல்வேறு பகுதிகளில் காற்றாடி பறக்கவிடுவது பாரம்பரியமாக உள்ளது. ஆனால் இதில் தீங்கை விளைவிக்கும் சீன மாஞ்சா நூலை பயன்படுத்துவதால் மனிதர்கள், பறவைகள், விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக இதன் மூலம் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைவது மட்டுமின்றி உயிர்ப்பலியும் நாட்டில் கணிசமாக அதிகரித்து வருகிறது. தவிர சுற்றுச்சூழலையும் பாதிக்க வைப்பதால் பசுமைத் தீர்ப்பாயம் இதில் தலையிடுவது அவசியமாகிறது.
எனவே, நைலானில் தயாரிக்கப்படும் சீன மாஞ்சா நூல் மற்றும் இதர செயற்கை பொருட்களில் தயாரிக்கப்படும் மக்கும் தன்மையற்ற மாஞ்சா நூல், கண்ணாடித்தூள் சேர்த்து தயாரிக்கப்படும் பருத்தி நூல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. இத்தகைய மாஞ்சா நூலை தயாரிப்பது, விற்பனை செய்வது, இருப்பில் வைப்பது, கொள்முதல் செய்வது மற்றும் காற்றாடிகளில் பயன்படுத்துவது ஆகியவை நாடு முழுவதும் உடனடியாக தடை செய்யப்படுகிறது.
உறுதி செய்யவேண்டும்இந்த தடை உத்தரவின் நகலை அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொள்வதற்காக மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
அதன்படி அவர்கள், காற்றாடிகளை பறக்கவிடுவதற்காக மாஞ்சா நூல் தயாரிப்பது, அதற்காக கண்ணாடித் தூள் மற்றும் செயற்கை பொருட்களை சேர்ப்பது இவற்றை கொள்முதல் செய்வது, விற்பது, இருப்பு வைப்பது, பயன்படுத்துவது ஆகியவற்றை தடுப்பதை உறுதி செய்யவேண்டும்.
இந்த தீர்ப்பை மீறுவோர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவால் இனி மாஞ்சா நூலை பயன்படுத்தி யாரும் காற்றாடிகளை பறக்க விட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.