பாதுகாப்பு வழங்கக்கோரி சேகர் ரெட்டி டெல்லி போலீசுக்கு கடிதம்


பாதுகாப்பு வழங்கக்கோரி சேகர் ரெட்டி டெல்லி போலீசுக்கு கடிதம்
x
தினத்தந்தி 12 July 2017 4:00 AM IST (Updated: 12 July 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

ஜாமீனில் வெளியில் வந்து தற்போது டெல்லியில் தங்கியுள்ள தொழில் அதிபர் ஜே.சேகர் ரெட்டி தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தனக்கும் குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி டெல்லி போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் அவரிடம் இருந்தும் அவருடைய இரு கூட்டாளிகளிடம் இருந்தும் ரூ.120 கோடி ரொக்கமாக கைப்பற்றப்பட்டது. அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கு ஒன்றில் கைதான அவருக்கு, சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

மேலும் ரூ.33 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த இரு வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்து

நிபந்தனை ஜாமீனில் உள்ள சேகர் ரெட்டி டெல்லியில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை அவர் மத்திய உள்துறை செயலாளர், தமிழ்நாடு உள்துறை செயலாளர், சென்னை நகர போலீஸ் கமி‌ஷனர் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக சென்னை சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாகவும், அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் தாக்குவது அல்லது அவர்களை கடத்தி பணம் பறிப்பது என சிலர் திட்டமிடுவதாகவும் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனக்கு பாதுகாப்பு கோரியதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

டெல்லி போலீஸ்

இதுதொடர்பாக டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவுக்கும் புகார் அளித்திருக்கும் சேகர் ரெட்டி, தனக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு ஆகும் செலவுகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

அவருடைய புகாரை தொடர்ந்து டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.


Next Story