வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது
வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசலப்பிரதேசம், மணிப்பூரில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும், பல லட்சம் ஏக்கர் மதிப்பிலான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்கள் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ”அசாம், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 58 மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஆகியவற்றால் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. இந்த மாவட்டங்களில் எதிர்பாராத அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் முயற்சியில் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் தொடர்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள குழந்தைகள் மற்றும் மக்களுக்கு தேவைப்படும் உணவு பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி மாநில அரசுககளை அறிவுறுத்தியுள்ளோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்த தொலை தொடர்பு துறை அமைச்சகம் தேவையான உதவிகளை செய்யும்.
வெள்ள பாதிப்புகள் குறித்து மதிப்பிட சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தலைமையிலான குழுவுடன் பிரதமர் அலுவலகம் இணைந்து செயல்பட்டு வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள சேதம் பெரிய அளவில் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்திவாசியமான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story