பாகிஸ்தான் எல்லையில் இந்திய பெருமைக்கு ஏற்றப்பட்ட தேசியக் கொடி தர்மசங்கட நிலையில் உள்ளது


பாகிஸ்தான் எல்லையில் இந்திய பெருமைக்கு ஏற்றப்பட்ட தேசியக் கொடி தர்மசங்கட நிலையில் உள்ளது
x
தினத்தந்தி 31 July 2017 11:34 AM GMT (Updated: 31 July 2017 11:34 AM GMT)

பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் பெருமைக்கு ஏற்றப்பட்ட தேசியக் கொடி தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


 
புதுடெல்லி,


பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில், நாட்டிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் மூவர்ணக்கொடி, மிக உயரமான கம்பத்தில் ஏற்றிவைக்கப்பட்டது. 120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட அந்தத் தேசியக்கொடியை பஞ்சாப் மாநில அமைச்சர் அனில் ஜோஷி மார்ச் மாதம் ஏற்றிவைத்தார். 110 மீட்டர் (360 அடி) உயரமுள்ள கம்பத்தில், இந்தக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 91.44 மீட்டர் உயரமுள்ள கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடியே, மிக உயரமான கம்பத்தில் பறக்கும் கொடியாகக் கருதப்பட்டது. 

அட்டாரி எல்லையில் தினமும் மாலையில் நடைபெறும் இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அணிவகுப்பைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பஞ்சாப் அரசின் சார்பில் ரூ.3.50 கோடி செலவில் இந்தக் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு, தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. இப்போது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக ஏப்ரல் மாதத்தில் இருந்தே இந்த கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. பலத்த காற்று காரணமாக தேசியக் கொடி சேதம் அடைந்து உள்ளது. இதனையடுத்து தேசியக் கொடி ஏற்றப்படவில்லை.

அமிர்தசரஸ் துணை கமிஷ்னர் கமல்தீப் சிங் சங்கா இதுதொடர்பாக அம்மாநில உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், மிகப்பெரிய தேசியக்கொடி பாகிஸ்தானில் இருந்தும் பார்க்கக்கூடியது. தேசியக் கொடி கிழிவது, கீழே விழுவது என்பது அனைவருக்கும் பெரும் தர்சமசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டு உள்ளார். பலத்த காற்று காரணமாக தேசியக் கொடி சேதம் அடையும் விவகாரத்தில் மாற்று வழியை கண்டுபிடிப்பதில் பஞ்சாப் மாநில உள்துறை அமைச்சகம் தொடர்ச்சியாக போராடி வருகிறது.

அமிர்தசரஸின் ரஞ்சித் அவென்யூ பகுதியிலும் 170 அடி உயரத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அங்கும் காற்று காரணமாக 13 முறை தேசியக் கொடி சேதம் அடைந்து உள்ளது. இப்போது மாவட்ட நிர்வாகம் சுதந்திர தினவிழாவிற்கு தயாராகி வருகிறது. இன்னும் 15 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் இதற்கான தீர்வு காணப்பட வேண்டியது உள்ளது. அமிர்தசரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் பேசுகையில், “ஆகஸ்ட் 15-ம் தேதி தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டு உள்ளேன். 

சுதந்திர தினம் அன்றாவது தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். இடையூறு இருந்தால் இறக்கிவிடலாம்,” என கூறிஉள்ளார். 

மேலும் அவர் பேசுகையில், “இவ்வகாரம் தொடர்பாக பஞ்சாப் மாநில உள்ளாட்சித் துறை மந்திரி நவ்ஜோத் சிங் சித்துவிடம் பேசுவேன், இவ்விவகாரத்திற்கு தீர்வு காணப்படும். இவ்விவகாரத்தை மத்திய அரசிடமும் எடுத்துச் செல்வேன், தேசியக் கொடி கம்பத்தின் உயரத்தை குறைக்கவும் பரிந்துரை செய்யப்படும்,” என்றார். கொடிக் கம்பத்தின் உயரம் குறைப்பு மற்றும் தேசியக் கொடி காற்றை எதிர்க்கொள்வது தொடர்பான நடவடிக்கைகள் பிரச்சனையை சரிசெய்யும் என்றும் குறிப்பிட்டு உள்ளார் குர்ஜீத் சிங். 

இரு கொடி கம்பங்களிலும் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்வது அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும். இரு தேசியக் கொடிக் கம்பங்களிலும் மீண்டும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும். செலவுகளையும் மாவட்ட நிர்வாகம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் எல்லையில் 360 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி மூன்று முறை சேதம் அடைந்து உள்ளது. எல்லையில் அமைக்கப்பட்டு உள்ள கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்ற ரூ. 6 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும், ரஞ்சித் அவென்யூவில் ரூ. 9 லட்சமும் செலவு செய்யப்பட்டு உள்ளது என அதிகாரிகள் கூறிஉள்ளனர். 

Next Story