குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சி கட்டுப்பாட்டில் கிடையாது - விஜய் ருபானி பேச்சு


குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சி கட்டுப்பாட்டில் கிடையாது - விஜய் ருபானி பேச்சு
x
தினத்தந்தி 7 Aug 2017 6:58 AM GMT (Updated: 7 Aug 2017 6:58 AM GMT)

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியின் கட்டுப்பாட்டில் கிடையாது என குஜராத் முதல்-மந்திரி விஜய் ருபானி கூறிஉள்ளார்.

ஆமதாபாத்,
 
குஜராத்தில் இருந்து டெல்லி மேல்–சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து பா.ஜனதாவை நோக்கி ஓட்டம் பிடித்தனர். பா.ஜனதா சார்பில் 2 பேரும், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் வெற்றி பெற முடியும். ஆனால் பா.ஜனதா 3–வது வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. இதனையடுத்தே காங்கிரஸ் மீதம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு கொண்டு வந்தது. அவர்கள் இன்று காலை குஜராத் கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  குஜராத்தில் நாளை டெல்லி மேல்–சபை தேர்தல் நடக்கிறது. 

 நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தி நகரில் குஜராத் முதல்-மந்திரி விஜய் ருபானிக்கும் பெண்கள் ராக்கி கட்டினர். அவர்களுக்கு விஜய் ருபானி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடையெ பேசிய விஜய் ருபானி, வெள்ளத்தில் மக்கள் உயிரிழந்து கொண்டு வருகிறார்கள், எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் கிடையாது. எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கை கிடையாது. பாரதீய ஜனதாவின் மூன்று வேட்பாளர்களும் வெற்றிப் பெறுவார்கள். அகமது பட்டேல் தோல்வி அடைவார் என கூறிஉள்ளார் விஜய் ருபானி.

Next Story