காங்கிரஸ் கட்சி கடும் சிக்கலை சந்தித்து வருகிறது -ஜெய்ராம் ரமேஷ்


காங்கிரஸ் கட்சி கடும் சிக்கலை சந்தித்து வருகிறது -ஜெய்ராம் ரமேஷ்
x
தினத்தந்தி 7 Aug 2017 11:28 AM GMT (Updated: 7 Aug 2017 11:28 AM GMT)

காங்கிரஸ் கட்சியானது தன்னை தக்க வைத்துக் கொள்ள போராடும் நிலையிலுள்ளது என்று கூறியுள்ளார் அதன் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ்.

கொச்சி

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் கொடுக்கும் சவால்களை சந்திக்க கட்சிக்கு கூட்டு முயற்சி ஒன்று தேவைப்படுகிறது என்று கூறினார் ஜெய்ராம் ரமேஷ்.

எப்போதும் போன்ற பாரம்பரிய அரசியல் இப்போதைய சூழலை சந்திக்கப் போதுமானதல்ல என்று கூறிய அவர் காங்கிரஸ் தன்னை சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

”காங்கிரஸ் பல தோல்விகளைக் கண்டுள்ளது; 1977 ஆம் ஆண்டில் கிடைத்த தோல்வி, 1996 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரை ஆட்சியை இழந்திருந்தது ஆகியவற்றை விட இப்போது தன்னை தக்கவைத்துக் கொண்டு அரசியலில் நீடிப்பதே சவாலாக இருக்கிறது” என்றார் அவர். குஜராத் காங்கிரஸ்சில் பிளவு உண்டாக்கி பேரவை உறுப்பினர்களை தங்கள் கட்சிக்கு அமித் ஷா இழுக்கும் முயற்சியை அடுத்தே பெங்களூருக்கு அவர்களை கொண்டு வந்ததை சரியான முடிவு என்ற ஜெய்ராம் பாஜகவும் இவ்வாறு உறுப்பினர்களை பாதுகாத்த சம்பவங்கள் வரலாற்றில் உண்டு என்றார்.

”மோடிக்கு எதிரான மனநிலை தானாக வெளிப்படும் என்பது தவறு என்றார் அவர். நாம் அவர்களை எதிர்க்கிறோம் என்பது மட்டுமல்ல, வித்தியாசமாக சிந்திக்க வேண்டும், நடக்க வேண்டும், நமது செயல்பாடுகளில் நீக்குப்போக்காக இல்லையென்றால் நாம் பொருத்தமற்றவர்களாக மாறிவிடுவோம், இதை வெளிப்படையாகவே சொல்கிறேன்” என்றார் ஜெய்ராம். இந்தியா மாறிவிட்டது என்பதை காங்கிரஸ் அங்கீகரிக்க வேண்டும். இனி பழைய கோஷங்கள், சூத்திரங்கள் பயனளிக்காது. இந்தியா மாறிவிட்டதால் காங்கிரஸ் கட்சியும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் அவர். 

காங்கிரஸ் தலைவராக ராகுல் விரைவில் பொறுப்பேற்பார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்து வரவுள்ள தேர்தலுக்குள் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்றார் ஜெய்ராம். மோடியை எதிர்த்து காங்கிரஸ் ஒன்றுபட்டு போராட வேண்டுமே தவிர தனி நபர் பெயர்களை மந்திரங்களாக உச்சரித்துக் கொண்டிருக்கக் கூடாது என்றார். 

இன்னும் கூட சிலர் கட்சி ஆட்சியில் இருப்பது போல பேசி வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய ஜெய்ராம் ரமேஷ் நமது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சி 1977 ஆம் ஆண்டு தோல்விக்குப் பின்னர் தன்னை புதுப்பித்துக் கொண்டது கர்நாடகத்தில்தான். இந்திரா காந்தி உ.பி மாநிலத்தின் ரேபரேலியில் தோல்வியடைந்ததால் 1978 ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதே போல காங்கிரஸ்  மீண்டும் கர்நாடகத்திலிருந்து புத்தெழுச்சி பெறும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார் ஜெய்ராம் ரமேஷ்.


Next Story