குஜராத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தல் தொடங்கியது

குஜராத்தில் மூன்று எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
காந்திநகர்,
குஜராத்தில் இருந்து டெல்லி மேல்–சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் (காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர்) ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிடுகிறார்கள். 3 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.
குஜராத் சட்டமன்றத்தில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் பார்த்தால், பா.ஜனதா சார்பில் 2 பேரும், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஒருவரும் வெற்றி பெற முடியும். ஆனால் பா.ஜனதா 3–வது வேட்பாளரை களம் இறக்கியுள்ளது.
இதற்கிடையே தேர்தல் அறிவிப்பு வெளியானதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ராஜினாமா செய்து பா.ஜனதாவை நோக்கி ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்தே காங்கிரஸ் மீதம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு கொண்டு வந்தது. அவர்கள் நேற்று குஜராத் கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காந்திநகர் சட்டசபையில் டெல்லி மேல்–சபை தேர்தல் நடக்கிறது. இதில் அம்மாநில எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளார்கள் ஸ்மிரிதி இரானி, அமித்ஷா மற்றும் முதல்-மந்திரி விஜய் ருபானி சட்டசபை வந்து உள்ளனர். மாநிலங்களவை தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாலை 4 மணிவரையில் தேர்தல் நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்கள் அதுவரையில் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யலாம் குஜராத் மாநில மாநிலங்களவைத் தேர்தலில் முதல் முறையாக நோட்டோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு எம்.பி. பதவிக்கு காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இது காங்கிரசுக்கு முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் வேட்பாளார் அகமது பட்டேல் என்னுடைய எம்.எல்.ஏ.க்கள் மீது நம்பிக்கை உள்ளது என கூறிஉள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சங்கர்சிங் வாகேலே சமீபத்தில் அக்கட்சியை விட்டு விலகினார். அவரும் வாக்களிக்க குஜராத் சட்டசபைக்கு வந்து உள்ளார். சங்கர்சிங் வாகேலே தரப்பு வாக்கு காங்கிரசுக்கு கிடைத்தால் வெற்றி எளிதானது. அகமது பட்டேலுக்கு வாகேலா நண்பராவார், ஆனால் பாரதீய ஜனதா சார்பில் களமிறக்கப்பட்டு உள்ள பல்வந்த்சிங் ராஜ்புத் அவருக்கு உறவினர் ஆவார்.
Related Tags :
Next Story