என்னுடைய வாக்கை காங்கிரசுக்கு போட்டு வீணாக்கவில்லை சங்கர்சிங் வகேலா பேட்டி


என்னுடைய வாக்கை காங்கிரசுக்கு போட்டு வீணாக்கவில்லை சங்கர்சிங் வகேலா பேட்டி
x
தினத்தந்தி 8 Aug 2017 5:08 AM GMT (Updated: 8 Aug 2017 5:08 AM GMT)

என்னுடைய வாக்கை காங்கிரசுக்கு போட்டு வீணாக்கவில்லை என சங்கர்சிங் வகேலா பேட்டியளித்தார்.

காந்திநகர்,

குஜராத்தில் இருந்து டெல்லி மேல்–சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது.

குஜராத் சட்டமன்றத்தில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் பார்த்தால், பா.ஜனதா சார்பில் 2 பேரும், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஒருவரும் வெற்றி பெற முடியும். ஆனால் பா.ஜனதா 3–வது வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. 

இதனால் மூன்றாவது இடத்திற்கு காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல், பாரதீய ஜனதா சார்பில் களமிறக்கப்பட்டு உள்ள பல்வந்த்சிங் ராஜ்புத்திற்கும் (காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர்) இடையே கடும் போட்டி நிலவுகிறது.  குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சங்கர்சிங் வாகேலே சமீபத்தில் அக்கட்சியை விட்டு விலகினார். மாநிலங்களவை தேர்தலில் அவருடைய வாக்கு முக்கியமானதாக கருதப்பட்டது. அகமது பட்டேலுக்கு வாகேலா நண்பர் ஆவார். 

ஆனால் பாரதீய ஜனதா சார்பில் களமிறக்கப்பட்டு உள்ள பல்வந்த்சிங் ராஜ்புத் அவருக்கு உறவினர். இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்த வகேலா பேசுகையில் என்னுடைய வாக்கை காங்கிரசுக்கு போட்டு வீணாக்கவில்லை என கூறிஉள்ளார். 

அவர் பேசுகையில், அகமது பட்டேலுக்கு வாக்களிக்கவில்லை, அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது. என்னுடைய வாக்கு வீணாவதை நான் விரும்பவில்லை. அகமது பட்டேல் உடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. ஆனால் முக்கியத்துவம் அற்றதற்கு நான் வாக்களிக்க விரும்பவில்லை. குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா சார்பில் இறக்கப்பட்டு உள்ள மூன்று பேரும் வெற்றி பெறுவார்கள். தேசியவாத  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பாரதீய ஜனதாவிற்கே ஆதரவு தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் அகமது பட்டேல் வெற்றிக்கு தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிஉள்ளார். 

காங்கிரஸ் வசம் உள்ள 44 எம்.எல்.ஏ.க்களிலும் அதிகமானோர் பாரதீய ஜனதாவிற்கே வாக்களிப்பார்கள் என வகேலா கூறிஉள்ளார். 

Next Story