நிதிஷ்குமாரின் செயல் அரசியல் தற்கொலைக்கு சமம் லாலு பிரசாத் யாதவ் கடும் தாக்கு


நிதிஷ்குமாரின் செயல் அரசியல் தற்கொலைக்கு சமம் லாலு பிரசாத் யாதவ் கடும் தாக்கு
x
தினத்தந்தி 8 Aug 2017 10:45 PM GMT (Updated: 8 Aug 2017 9:31 PM GMT)

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்நிலையில் திடீரென இந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகி, பா.ஜனதாவுடன் இணைத்து ஆட்சி அமைத்து உள்ளது.

பாட்னா,

இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

நிதிஷ்குமார் என்னை விட அரசியல் முதிர்ச்சி அடைந்தவர் என நம்பினேன். ஆனால் அவர் அதை தவறு என நிரூபித்து விட்டார். இதற்காக நான் வருந்துகிறேன். நம் நாட்டில் இனி எந்த கட்சியும் நிதிஷ்குமாரை நம்பாது.

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமாரின் செயல் அரசியல் தற்கொலைக்கு சமம். அவருடைய அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அவருடைய கட்சி 2 இடங்களுக்கு மேல் வெற்றி பெற முடியாது. அதேபோல் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதா கூட்டணி தற்போது உள்ள இடங்களை தக்கவைப்பதே சந்தேகம் தான்.

பாட்னாவில் வருகிற 27–ந் தேதி நடைபெற உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள பொதுக்கூட்டத்துக்கு மணல் மாபியாக்கள் நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம்சாட்டி இருப்பதில் உண்மை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story