சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்


சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்
x
தினத்தந்தி 8 Aug 2017 11:15 PM GMT (Updated: 8 Aug 2017 10:03 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், 27–ந் தேதி ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் வரும் 27–ந் தேதி ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா (வயது 63) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் 2–ந் தேதி வரை 13 மாதங்கள் பதவி வகிப்பார்.

புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தீபக் மிஸ்ரா, 1953–ம் ஆண்டு அக்டோபர் 3–ந் தேதி பிறந்தவர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். 1977–ம் ஆண்டு, பிப்ரவரி 14–ந் தேதி தன்னை ஒரு வக்கீலாக பதிவு செய்து கொண்டார். அரசியல் சாசனம், சிவில், கிரிமினல், வருவாய், பணிகள், விற்பனை வரி என பல துறை வழக்குகளிலும் ஒடிசா ஐகோர்ட்டில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.

1996–ம் ஆண்டு, ஜனவரி 17–ந் தேதி ஒடிசா ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு, மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 1997–ம் ஆண்டு, டிசம்பர் 19–ந் தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2009–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23–ந் தேதி பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆனார். 2010–ம் ஆண்டு, மே மாதம் 24–ந் தேதி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.

2011–ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இப்போது கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவர் ‘மக்கள் நீதிபதி’ என்ற சிறப்பு பெயரைப் பெற்றவர் ஆவார்.

1993–ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், மரண தண்டனை நிறைவேற்றுவதை எதிர்த்து யாகூப் மேமன் தாக்கல் செய்த மனுவை அவசர மனுவாக 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் நள்ளிரவுக்கு பின்னர் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் அமர்வில் நீதிபதி தீபக் மிஸ்ரா இடம் பெற்றிருந்தார். அதிகாலை 5 மணிக்கு, ‘‘யாகூப் மேமன் மரண தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்டுள்ள மரண கட்டளையை நிறுத்தி வைத்தால் அது நீதியை பரிகாசம் செய்வது போலாகும். அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என அறிவித்தது நீதிபதி தீபக் மிஸ்ராதான். அடுத்த 2 மணி நேரத்தில் யாகூப் மேமன் தூக்கில் போடப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.


Next Story