டெல்லியில் தமிழக விவசாயிகள் 5 பேர் சாகும் வரை உண்ணாவிரதம்


டெல்லியில் தமிழக விவசாயிகள் 5 பேர் சாகும் வரை உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 9 Aug 2017 10:45 PM GMT (Updated: 9 Aug 2017 8:05 PM GMT)

டெல்லியில் தமிழக விவசாயிகள் 5 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் நேற்று 25–வது நாளாக நீடித்தது.

தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார். ஆனால் நேற்று காலை டெல்லியில் மழை பெய்ததால் அந்த போராட்டம் கைவிடப்பட்டது. விவசாயிகள் அனைவரும் போராட்ட களத்திலேயே முடங்கினர்.

போராட்டத்தில் புதிதாக பங்கேற்ற பல்லடம் நாராயணசாமி (வயது 85), துவரங்குறிச்சி பழனிசாமி (65), சென்னை செல்லபெருமாள் (58), திருச்சி பெரியசாமி (74), ராஜவேல் (46) ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தனர்.

இதற்கிடையே, அய்யாக்கண்ணு தலைமையில் சிலர், எம்.பி.க்களை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவில் கையெழுத்து பெற சென்றனர். இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், ‘நாங்கள் குறைந்தது 200 எம்.பி.க்களிடம் கையெழுத்து பெற முடிவு செய்து உள்ளோம். இதுவரை 70 பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம். கையெழுத்து பெற்ற மனுவை விரைவில் பிரதமர் அலுவலகத்தில் அளிப்போம்’ என்றார்.


Next Story